மாற்று இடம் தந்த பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதாக அமையும் : ஐகோர்ட் கிளை அதிரடி!!

மதுரை : நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூரில் உள்ள பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஸ்வாமிநாதன் என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளை தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு கருத்து தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகள் ஆக்கிரமிப்பால் தமிழகத்தில் சூழலியல் பாதிக்கப்படுகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முழுமையாக அகற்றப்படாதது ஆச்சரியமளிக்கிறது.ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். நீர் நிலையங்களின் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடைபெறாது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. மாற்று இடம் தந்த பின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்பது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிப்பதாக அமையும். நீதிமன்ற உத்தரவுக்கு பின் எவ்வித மாற்று ஏற்பாடுமின்றி விரைவாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை. பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பை 2 மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: