கோடாலிகருப்பூர் வக்காரமாரி காலனியில் இடிந்து சேதமடைந்த பாலத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் கிராமத்தில் வக்காரமாரி காலனி பகுதி உள்ளது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே போல் அந்த பகுதிக்கு அருகில் கோடாலி கருப்பூர் காலனி விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் உள்ளன. அந்த பகுதியில் அணைக்குடம் - அணைக்கரை சாலையிலிருந்து வக்காரமாரி காலனி பகுதி செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் குறுக்கே பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து வரும் 4 எண் பாசன வாய்க்கால் உள்ளது.

இந்த வாய்க்காலை கடந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்து உள்ளது. மேலும் 4 எண் பாசன வாய்க்கால் சோழமாதேவி, கோடாலி கருப்பூர், உதயநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரக்கூடிய பாசன வாய்க்கால் ஆகும். இதில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் அந்தப் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சிறிது சிறிதாக அரிப்பு ஏற்பட்டு சுவர் உள்பக்கமாக சரிந்து விழுந்துள்ளது.

இதனால் பாலத்தின் கான்கிரீட் பகுதி இணைப்புச் சாலையின் மேற்பரப்பில் இணைந்தவாறு மட்டுமே உள்ளது. மழைக்காலங்களில் ஓடும் நீரால் மண் அரிப்பு ஏற்படும் பொழுதும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடும் பொழுதும் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தில் உள்ள சரளை கற்கள் சரிந்து தொங்கு பாலம் போல் இருந்து வருகிறது. ஆகையால் இந்த பாலம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அந்த பாலத்தின் மீது செல்லும் போது மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள பழைய பொன்னார் பிரதான வாய்க்கால் பாசனம் மூலம் விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தியாகும் பொருட்களை எடுத்துச் செல்லவும் விவசாயம் செய்ய நிலங்களுக்கு செல்வதற்கும் இந்த பாலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாலத்தின் வழியாக தனியார் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. அபாயகரமான இந்த பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது அந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிர் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள பாலத்தை அகற்றி தரமான புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Related Stories: