×

கலைஞரின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் மாவட்டத்தில் 57 தரிசு நிலங்கள் விளை நிலமாக மாற்றம்: வேளாண் உற்பத்தியை பெருக்க உன்னத திட்டமென பாராட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் கலைஞரின் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் 57 இடங்களில் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு, விவசாயம் செய்வதற்கான தகுதிக்குரிய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும் உன்னத திட்டமாக உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், முல்லைப்பெரியாறு பாசனத்தில் ஒரு போக பாசனம் 43 ஆயிரம் ஏக்கரும், இருபோக பாசனம் 85 ஆயிரம் ஏக்கரும், திருமங்கலம் கால்வாய், நிலையூர் கால்வாய், சாத்தையாறு அணை பாசனம், 58ம் கால்வாய் பாசனம் என மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பாசனம் உள்ளது.

மாவட்டத்தில் தற்போது முதல்போக சாகுபடிக்கான நடவு பணிகள் முடிந்துள்ளது. மாவட்டத்தில் மொத்த நெல் சாகுபடிக்கான இலக்கு 42 ஆயிரத்து 500 ஹெக்டேர் ஆகும். சிறுதானியம் 34 ஆயிரத்து 444 ஹெக்டேர், பயறு வகைகள் 10 ஆயிரத்து 400 ஹெக்டேர், கரும்பு 2 ஆயிரத்து 200 ஹெக்டேர், பருத்தி 10 ஆயிரத்து 400 ஹெக்டேர் என உள்ளது. இதில், கடந்த ஆண்டை போல குறுவை நெல் சாகுபடி பரப்பு 9 ஆயிரத்து 704 ஹெக்டேரில் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சிறுதானியம் 448 ஹெக்டேர், பயறு வகைகள் 127 ஹெக்டேர், கரும்பு 652 ஹெக்டேர், பருத்தி 284 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது.

மாவட்டத்தில், கலைஞரின் ஒருங்கிணைந்த தரிசு நில மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி மாவட்டத்தில் தரிசு நிலத்தினை ஆய்வு செய்து, அதில் விவசாயத்திற்கு தகுந்த மாதிரி, தண்ணீர் வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுகிறது. பாசனத்திற்கான மானியமும் கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை- வணிகத்துறை, வேளாண் அறிவியல் நிலையம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 15 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2021-2022ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 2021-2022ம் ஆண்டில், இத்திட்டத்தில் 58 கிராம பஞ்சாயத்துகளில் 22 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டன. அதில், 18 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு தரிசு நிலங்கள் விளை நிலங்களாக்குவதற்கு மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நடப்பு ஆண்டில் (2022-23) இத்திட்டத்தில், 112 கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை 35 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

 அதற்காக விவசாயிகளுக்கு தென்னங்கன்று விநியோகம், கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் விநியோகமும், வரப்பில் பயறு விதைகள் விநியோகம்- தோட்டக்கலையில் வீட்டுத்தோட்டம் அமைத்தல், தோட்டக்கலை பயிர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், வரப்பில் பழ மரக்கன்றுகள் நடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மை பொறியியல் துறை மூலமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பண்ணைக்குட்டைகள்- நீர் ஆதாரங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 57 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு, விவசாயம் சார்ந்த நிலமாக இவைகள் மாற்றப்பட்டுள்ளன. இத்திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Conversion of 57 barren lands to agricultural land in the Kartika Barren Land Development Project: Appreciated as a noble project to increase agricultural production
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...