×

ஊசி முதல் ஏசி வரை விற்பனை செய்யப்படும் பல்லாவரம் வார சந்தை திடீர் மூடல்: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்

பல்லாவரம்: பல்லாவரத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் புகழ்பெற்ற சந்தை நேற்று திடீரென மூடப்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பல்லாவரத்தில் வார சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் 200 ஆண்டுகள் பழைமையான இந்த சந்தையில், ஊசி முதல் ஏசி வரை  கிடைக்காத பொருள்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஏராளமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள், பழங்கள், எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள், பூச்செடிகள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர வாகனங்கள், தானியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இங்கு குறைந்த விலையில் கிடைக்கும்.

வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காகவே சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து, தங்களுக்கு வேண்டிய பொருள்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.  இந்நிலையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்த வண்ணம் இருந்தனர். மேலும், நேற்று முன்தினம் ஆரம்பமான செஸ் விளையாட்டு போட்டிகளை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்து கொண்டு, தமிழக முதல்வருடன் சேர்ந்து விழாவை தொடங்கி வைத்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நாட்டின் முக்கிய பிரமுகர்களும், பிற நாட்டு விளையாட்டு வீரர்களும் சென்னை விமான நிலையம் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை போலீசார் செய்து வருகின்றனர். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக, சென்னை விமான நிலையம் அருகே மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடும் இடமானதுமான பல்லாவரம் சந்தையை திறப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பல்லாவரம் கன்டோண்மென்ட் நிர்வாகம் சார்பில் வழக்கமாக சந்தை நடைபெறும் இடத்தில், சந்தை இன்று விடுமுறை என்று விளம்பர பாதாதைகள் வைக்கப்பட்டது. மேலும் தடுப்புகளை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தை நடைபெறும் பகுதியில் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இது தெரியாமல் வழக்கம் போல் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தையில் பொருட்கள் வாங்கலாம் என்று திரண்டு வந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்ய வந்த சிறு வியாபாரிகள் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : Ballavaram , Needle to AC sales, Pallavaram weekly market, public disappointed
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...