கல்வான் பள்ளத்தாக்கு மோதல்; பலியான சீன வீரர்கள் எண்ணிக்கை எவ்வளவு?.. விவரம் கூற ராணுவம் மறுப்பு

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது கொல்லப்பட்ட சீன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கூற, ஒன்றிய தகவல் ஆணையம் மறுத்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்தனர். அப்போது நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஆனால், சீனா வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதலின்போது உயிரிழந்த சீன வீரர்கள் எண்ணிக்கையை கூறும்படி, ராணுவத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அகாந்த் என்பவர் கேட்டார்.

ஆனால், ‘தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டப்பிரிவின் கீழ், இந்த தகவலை வழங்க முடியாது,’ என்று ராணுவம் மறுத்து விட்டது. இது குறித்து மனுதாரர் ஒன்றிய தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தார். அதற்கு, ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 8(1)ஏ பிரிவின் கீழ் உணர்வுபூர்வமான தகவல்களை வழங்க முடியாது. ராணுவத்தின் பதிலில் எந்த குறைபாட்டையும் ஆணையத்தால் கண்டறிய முடியவில்லை,’ என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: