×

ஐஐடி உடன் இணைந்து தமிழக அரசு செயல்பட உள்ளது: சாலை பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான செயல் திட்டம்

சென்னை: சாலை பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு, சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து சில முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சாலை பாதுகாப்பு சிறப்பு பணிக்குழுவும் சென்னை ஐ.ஐ.டி.யின் சாலை பாதுகாப்பு திறன்மிகு மையமும் இணைந்து கையெழுத்திட்டுள்ளது. விபத்து நடக்கும் இடங்களில் தடயவியல் விபத்து தணிக்கைகளை நடத்துவது, மனித, வாகனம் மற்றும் சாலைகளின் சூழலை கருத்தில்கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்குவது, ஆபத்தான இடங்களில் விபத்துகளை தவிர்ப்பதற்கான பரிந்துரைகளை புகைப்படங்களுடன் சமர்ப்பிப்பது, போக்குவரத்தை திறம்பட அமல்படுத்துவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை முழுமையாக உருவாக்குவது என இதற்கு இலக்குகளை நிர்ணயித்துள்ளனர்.

 இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கூறுகையில், ‘இளம் மாணவர்களும், வருவாய் ஈட்டுவோரும் சாலை விபத்துகளில் உயிரிழப்பதால், அவர்களுடைய குடும்பத்துக்கும், நம்முடைய சமூகத்துக்கும் ஏற்படும் சமூக-பொருளாதார சுமையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். எனவே சாலை பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்று’ என்றார். சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறும்போது, ‘தமிழக போலீஸ் துறையின் வலுவான தொழில்நுட்ப மற்றும் கள அனுபவங்களையும், அவர்களிடம் உள்ள ஏராளமான தரவுகளையும் பயன்படுத்தி ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்புக்கான செயல்திட்டத்தை மிக குறுகிய காலத்திலேயே வடிவமைக்க முடியும்’ என்றார்.


Tags : Government of Tamil Nadu ,IIT , Government of Tamil Nadu in collaboration with IIT: Scientific action plan for road safety
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...