×

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.30.78 கோடியில் யானைக்கவுனி ரயில்வே மேம்பாலப் பணிகள்: 3 மாதத்தில் முடிக்க மேயர் உத்தரவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரூ.30.78 கோடியில் நடைபெறும் யானைக்கவுனி ரயில்வே மேம்பால பணிகளை 3 மாதத்துக்குள் விரைந்து முடிக்க மேயர் பிரியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 57வது வார்டில் அமைந்துள்ள யானைக்கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே 1933ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகவும் பழமையான பாலங்களில் ஒன்றான இந்த மேம்பாலத்துக்கு அடியில் 8 தண்டவாளங்கள் செல்கின்றன. வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாக இது அமைந்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலைய பணிமனை மற்றும் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால், இந்த  பாலத்தை அகலப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டது. இந்த  பாலத்தில் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை பகுதியை மட்டுமே மாநகராட்சி  பராமரித்து வந்தது. பழமையான இந்த பாலம் மிகவும் பழுதடைந்ததால், கனரக  வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே துறை மற்றும் போக்குவரத்து துறை தடை  விதித்தது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன.

எனவே, இந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக, இந்த பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 2 பெரிய கிரேன்கள் மற்றும் இயந்திரங்களுடன்  மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. 12 நாட்களில் பாலம் இடித்து  அகற்றப்பட்டது.
50 மீ. நீளமுள்ள பாலப்பகுதி இடிக்கப்பட்டு 156.12 மீ. அளவிற்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை சென்னை மாநகராட்சியால் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ., மற்றும் ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ., நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் அமைக்க ரூ.30.78 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டன. தற்போது, இந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி மேயர் பிரியா நேற்று இந்த பாலப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி சார்பில் சாய்தள சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தி, அடுத்த 3 மாத காலத்திற்குள் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். மேலும், ரயில்வே துறையின் மூலம் அமைக்கப்பட வேண்டிய 156.12 மீ. நீளமுள்ள இருப்பு பாதையின் மேல் அமைக்கப்பட வேண்டிய பாலப் பணியை துரிதப்படுத்த ரயில்வே துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்’’ என்றார்.

இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Yanakauni Railway ,Central Railway Station , Central Railway Station, Yanakauni Railway Flyover Works, Mayoral Order
× RELATED கூட்டநெரிசலை தவிர்ப்பதற்காக...