தமிழக அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி

மதுரை: தமிழகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பயோ  மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்தக் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ெபரும்பாலான அரசு ஊழியர்கள் நேரத்தை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக பணிக்கு வரவேண்டும் என்பதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் பயோ  மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது.

இந்த நடைமுறை தமிழகத்திலுள்ள 141 மத்திய அரசு துறை சார்ந்த நிறுவன மற்றும் அமைப்புகளில் அமலில் உள்ளது. சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த நடைமுறை தமிழக அரசின் பெரும்பாலான அரசுத்துறைகளில் பின்பற்றப்படவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘தமிழகம், புதுச்சேரியில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை பெரும்பாலும் அமலில் உள்ளது. எனவே, மேல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: