×

மே. வங்கத்தில் மேலும் ஒரு வீட்டில் சோதனை நடிகையின் 4 சொகுசு கார்களில் ஊர் சுற்றும் பல கோடி பணம்: கேமரா மூலம் வலைவீசும் அமலாக்கத் துறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான 4 சொகுசு கார்களில் பதுக்கப்பட்ட பல கோடி பணம் ஊர் ஊராக சுற்றி வருவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் அமலாக்கத் துறை, இம்மாநில அமைச்சராக இருந்த பார்தா சட்டர்ஜியையும், அவருடைய உதவியாளரும், தமிழ் நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் கடந்த வாரம் கைது செய்தது. அவர்களிடம் நடத்தப்படும் தொடர் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன் அடிப்படையில் அர்பிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையில் அர்பிதாவின் வீட்டில் ரூ.21 கோடி ரொக்கம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டில் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் ரூ.28 கோடி ரொக்கமும், 6.5 கிலோ தங்க நகைகளும் சிக்கின.

இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் சினார் பார்க்கில் உள்ள அர்பிதாவின் மற்றொரு வீட்டிலும் நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தப்பட்டது.  அக்கம் பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், இந்த வீட்டில் நிறுத்தப்பட்ட இருந்த 4 சொகுசுகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அவற்றில் பல கோடி பணம் வைக்கப்பட்டு, ஊர் ஊராக சுற்றி வருவதாக கருதப்படுவதால், சிசிடிவி கேமராக்கள் மூலம் அவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

என்னை சுற்றி சதிவலை
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்தா சட்டர்ஜியை அமைச்சர் பதவியிலும், கட்சியில் இருந்தும் முதல்வர் மம்தா நேற்று முன்தினம் நீக்கினார். நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது நிருபர்களிடம் பேசிய சட்டர்ஜி, ‘என்னை சுற்றி பின்னப்பட்ட சதிவலையால் பாதித்துள்ளேன்,’ என்றார்.

என்ன கார்
*  ஆடி ஏ4 சொகுசு கார்
* ஹோண்டா சிட்டி
*  ஹோண்டா சிஆர்வி
* மெர்சிடிஸ் பென்ஸ் கார்
*சாதாரண நெயில் பாலிஸ் நிபுணராக இருந்த அர்பிதா, பார்தா சட்டர்ஜியுடன் ஏற்பட்ட நட்பால், ஒரு சில ஆண்டிலேயே கோடீஸ்வரியாக மாற்றி விட்டார்.

இட்லி பார்சல் போல் கட்டப்பட்ட பணம்
நடிகை அர்பிதா வீட்டில் நேற்று முன்தினம் சிக்கிய ரூ.28 கோடி பணம், நகைகளின் விவரம்:
* ரூ.2,000  நோட்டுகள் தலா ரூ.50 லட்சமாகவும், ரூ.500 நோட்டுகள் தலா ரூ.20 லட்சமாகவும் இட்லி பார்சல் போல் கட்டப்பட்டு இருந்தன.
* 1 கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள்
* தலா அரை   கிலோ எடையுள்ள  6 தங்க கைகாப்பு.
* அரை கிலோ தங்க நகைகள், தங்க பேனா
* இந்த  நகைகளின் மதிப்பு ரூ.4.31 கோடி

Tags : Bengal , West Bengal, Probation, Actress, Enforcement Deptt
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...