ஒரே பதவி; பென்ஷன் சீராய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று, ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2015ம் ஆண்டு அமல்படுத்தியது. இத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் கொள்கையில் எந்த அரசியலமைப்பு சட்ட குறைபாடுகளும் இல்லை. இத்திட்டம் சட்டப்படி செல்லும்’ என கடந்த மார்ச் 16ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘மறு ஆய்வு செய்வதற்கான மனு மற்றும் அதற்கான ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தோம். இதில் மறு ஆய்வு செய்வதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம்,’ என உத்தரவிட்டனர்.

Related Stories: