×

காமன்வெல்த் விளையாட்டு திருவிழா

* காமன்வெல்த் பேட்மின்டன் கலப்பு குழு பிரிவில் பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் அமர்க்களமாக வென்றது. இந்தியா சார்பில் ஒற்றையர் ஆட்டங்களில் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், இரட்டையர் ஆட்டங்களில் சாத்விக் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி (ஆண்கள்), த்ரீஸா ஜாலி - காயத்ரி கோபிசந்த் (மகளிர்), சுமீத் ரெட்டி - அஷ்வினி பொன்னப்பா (கலப்பு) வெற்றிகளைக் குவித்தனர்.
* மகளிர் தனிநபர் டிரையத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனைகள் பிரக்னியா மோகன் 26வது இடமும், சஞ்சனா ஜோஷி 28வது இடமும் பிடித்தனர்.
* மகளிர் டேபிள் டென்னிஸ் 2வது பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் பிஜி அணியை வீழ்த்தியது.

ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி
காமன்வெல்த் மகளிர் ஹாக்கி ஏ பிரிவில் இந்தியா - கானா அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்தியா சார்பில் குர்ஜித் கவுர் 2, சங்கீதா குமாரி, சாலிமா, நேஹா தலா 1 கோல் போட்டனர். வெற்றி மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள்.

இங்கிலாந்துக்கு முதல் தங்கம்
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டித் தொடரில் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையை இங்கிலாந்தின் அலெக்ஸ் யீ பெற்றுள்ளார். ஆண்கள் டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற அவர் 50 நிமிடம், 34 விநாடியில் பந்தய தொலைவைக் கடந்து முதலிடம் பிடித்தார். நியூசிலாந்தின் ஹேடன் ஒயில்டு 13 விநாடிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹாசர் (50 நிமிடம், 50 விநாடி) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மனிகா பத்ரா வெற்றி தொடக்கம்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் மனிகா பத்ரா, தென் ஆப்ரிக்காவின் முஷ்பிகு கலாமுடன் நேற்று மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய மனிகா 11-5, 11-3, 11-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரீத் டென்னிசன் - ஸ்ரீஜா அகுலா இணை 11-7, 11-7, 11-5 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்க ஜோடியை வீழ்த்தியது.

ஷிவ தாபா முன்னேற்றம்
காமன்வெல்த் ஆண்கள் குத்துச்சண்டை லைட் வெல்ட்டர்வெயிட் (63.5 கிலோ) பிரிவு முதல் சுற்றில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் ஷிவ தாபா அதிரடியாக விளையாடி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பாகிஸ்தானின் சுலைமான் பலோச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.


Tags : Commonwealth Games Festival , Commonwealth Games Festival,
× RELATED காமன்வெல்த் விளையாட்டு திருவிழா 2022