×

44-வது செஸ் ஒலிம்பியாட்: முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் வெற்றி; ஹாங்காங் மகளிரை வீழ்த்தினர்

சென்னை: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் ஆட்டத்தில்  இந்திய மகளிர் 3வது அணி ஹாங்காங் மகளிர் அணியை 4-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது. மாமல்லபுரத்தில் பொது பிரிவு ஆட்டங்களின் முதல் சுற்று  நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள்  மோதின. அணிக்கு தலா 4 வீரர்கள்  வீதம் அடுத்தடுத்த மேசைகளில் களம் கண்டனர். முதல் மேசையில்  இந்தியாவின் முதல் அணியை சேர்ந்த விதித் சந்தோஷ் குஜராத்தி, ஜிம்பாப்வேயின்  மகோடோ ராட்வெல் மோதினர்.

2வது மேசையில்  இந்தியாவின் அர்ஜுன்  எரிகைசி - மசங்கோ ஸ்பென்சர், 3வது மேசையில்  எஸ்.எல்.நாரயணன் - முஷோர் எமரால்லு தகுடஸ்வா, 4வது  மேசையில் சசிகிரண் கிருஷ்ணன் - ஸ்கிம்பா ஜெம்யூசி ஆகியோர் களம் கண்டனர். இந்திய வீரர்கள், பிரதமர் தேர்வு செய்தபடி கருப்பு  காய்களுடன் விளையாடினர். இந்தியாவின் 2வது அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது.  அதில் பி.அதிபன், நிகில் ஷரின், டி குகேஷ், ரவுனக் சதவானி ஆகியோர் இடம் பெற்றனர். அதில் ரவுனக் சதவானி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் அமீரகத்தின் அல் தாஹிர் அப்துல் ரஹ்மானை வீழ்த்தியதுதான் இந்த தொடரில் கிடைத்த முதல் முடிவு.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் 3வது அணி  தெற்கு சூடானை எதிர்த்து களம் காண்டது. அதில் தமிழக வீரர்கள் எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோருடன் அபிஜித் குப்தா, அபிமன்யூ புராணிக் ஆகியோர் விளையாடினர். இந்திய மகளிர் பிரிவில் முதல் அணி தஜிகிஸ்தான் அணியை சந்தித்தது. இந்திய அணியில் கொனேரு ஹம்பி, ஆர்.வைஷாலி,  தானியா சச்தேவ்,   பக்தி குல்கர்னி ஆகியோர் முறையே  தஜிகிஸ்தானின் நடேசடா அன்டோனோவா,  சபரினா அப்ரொரோவா, ருக்ஷனா சாய்டோவா, முத்ரிபா ஹோடமி ஆகியோருடன் விளையாடினர்.

மற்றொரு மகளிர் பிரிவு சுற்றில்   3வது இந்திய அணியுடன், ஹாங்காங் மகளிர் அணி மோதியது. இந்திய வீராங்கனைகள்  ஈஷா காரவடே,  பி.வி.நந்திதா, எம். வர்ஷினி சாஹிதி, பிரதியுஷா போட்டோ ஆகியோருடன் முறையே ஹாங்காங் வீராங்கனைகள் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த  சிகப்பி கண்ணப்பன், ஜிங் ஜின் கிரிஸ்டன் டெங்,  ஜாய் ஜிங்w லீ, கா யான் லாம் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையான வெற்றியை வசப்படுத்தி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

முதல் வெற்றி: இந்திய வீரர் ரவுனக் சதவானி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் அமீரகத்தின் அல் தாஹிர் அப்துல் ரஹ்மானை வீழ்த்தி அசத்தினார். இந்த தொடரில் கிடைத்த முதல் முடிவாக இது அமைந்தது. வெற்றிச் சின்னம் காட்டுகிறார் சதவானி.

சதுரங்க கட்டத்தில்...
* பொது பிரிவில்  நேற்று 192 ஆட்டங்கள்  நடந்தன. பாகிஸ்தான் போட்டியில் இருந்து திடீரென விலகியதால் பொது, மகளிர் பிரிவில் அந்த அணி பங்கேற்கும் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. நேற்று மட்டும் 1392 வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர்
*  பொது, மகளிர் பிரிவுகளில் தலா 76 அணிகள் தினமும் விளையாட உள்ளன.  மொத்தம் 304 மேசைகளில்  ஆட்டங்கள் நடக்கின்றன.
* இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இன்று களமிறங்குகிறார். அவர் நேற்றே களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஓய்வு அளிக்கப்பட்டு இன்று விளையாடுவார் என இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முதல்வரின் கனவு நனவானது...
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்க 186 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பார்வையாளர்கள் வந்துள்ளனர். இங்கு, ஏற்கனேவே உள்ள 22 ஆயிரம் சதுர அடியில் பழைய அரங்கம், 52 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட புதிய அரங்கம் ஆகிய இரண்டு அரங்குகளில் 177 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. இன்று,  வெளிநாட்டு வீரர்கள் வியந்து பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஒட்டுமொத்த வெற்றியாளர் முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். இப்போட்டியில், பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளை எப்படி வரவேற்க வேண்டும் என தொடர்ந்து முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். இங்கு, போட்டி நடைபெறுவதால் முதல்வரின் கனவு திட்டம் நிறைவேறி உள்ளது.  :- தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

முதல்வருக்கு பாராட்டு + நன்றி...
சர்வதேச 44வது செஸ் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து, வீரர், வீராங்கனைகளும் இந்தியா வந்தனர். இந்நிலையில், போட்டியிலிருந்து விலகி நேற்று காலை அவசர, அவசரமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு புறப்பட்டனர். இதற்கு, காரணம் என்னவென்றால், பாகிஸ்தான் தனக்கு சொந்தமான காஷ்மீரில் ஒலிம்பியாட் ஜோதியை கொண்டு வந்ததாக அந்நாட்டு வட்டாரம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் என்பது, நமது நாட்டின் ஒரு முக்கிய பகுதி, அதற்கு எந்தவிதத்திலும் தனக்கு சொந்தம் என பாகிஸ்தான் உரிமை கோர முடியாது.

இப்போது,  ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகி இருக்கிறது. இனி வரும், காலங்களில் நடக்கும், காமன்வெல்த், ஒலிம்பிக் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் இருந்து விலகுமா?  மேலும், இப்போட்டிக்காக 4 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும், வெறும் 4 மாதங்களில் முழுமையாக முடித்து, இப்பகுதியை வெளிநாடுகளில் உள்ளது போது, அனைவரும் பிரம்மிக்கும் வகையில் ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   :- ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்

Tags : 44th Chess Olympiad ,Hong Kong , Chess Olympiad, first game, win
× RELATED மனிதர்களின் குரலை வைத்து உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆடுகள்