வேலை வாங்கித்தருவதாக ரூ8 லட்சம் வாங்கி ஏமாற்றினார்; எடப்பாடி உதவியாளர் மீது மீண்டும் மோசடி புகார்: துணை கமிஷனரிடம் அதிமுக பிரமுகர் மனு

சேலம்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி மோசடி செய்து கைதான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது மீண்டும் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் நடுப்பட்டி மணி. இவர் ஏராளமானோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பலகோடி ரூபாய் பெற்றதாகவும்,  அதிகாரிகளுக்கு இடமாறுதல் வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடுப்பட்டி மணி, அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

மொத்தம் 30பேரிடம் ஒரு கோடியே 37லட்சம் ரூபாய் பணம் பெற்றிருந்தது தெரியவந்தது. இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கிஷோர், என்பவர் துணை கமிஷனர் மாடசாமியிடம்  புகார் கொடுத்துள்ளார். அதில், நடுப்பட்டி மணி, ‘‘ரேஷன் கடையில் தனது உறவினர்கள் 2 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ8 லட்சம் பெற்றார். தற்போது அவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டால் என்னை விரட்டுகிறார்,’’ என்று அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ஏராளமான அதிமுக நிர்வாகிகளிடம் மணி, பணம் வாங்கியதாகவும் அவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக புகார் கொடுக்க வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: