தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது: தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு

மதுரை: தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்குவதாக தலைமை நீதிபதி அமர்வு பாராட்டியுள்ளது. மதுரை, கோமஸ்பாளையத்தைச் சேர்ந்த முத்துச்செல்வம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கொரோனா சூழலால் ஏற்பட்ட வறுமை காரணமாக பல குடும்பங்கள் ஏழ்மை நிலையில் உள்ளன. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி, பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தவும், இந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு கூடுதல் பிளீடர் சாதிக்ராஜா ஆஜராகி, ‘‘தமிழகத்தில் நூறு சதவீத கல்வியறிவு என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இல்லம் தேடி கல்வி, எஸ்எஸ்ஏ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கியோர், சமூக ரீதியாக பின்தங்கியோர் உள்ளிட்ட பல்ேவறு பிரிவினரின் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கல்வியில் பின்தங்கிய நிலையில் தமிழகம் இல்லை. வீடுகள்தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகமும், கேரளாவும் கல்வியறிவில் சிறந்து விளங்குகிறது. இது அந்தந்த மாநில அரசுகளின் சாதனை தான்’’ எனக்கூறினர். பின்னர், ‘‘தற்போதைய நிலவரப்படி பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் குறித்த புள்ளி விபரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: