×

ஆறுமுக சுவாமி குருபூஜை விழா; குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்

திருவண்ணாமலை: பெரணமல்லூர் அருகே மகான் ஆறுமுக சுவாமி குருபூஜை விழாவில் பங்கேற்ற பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் அளித்து அருளாசி வழங்கி வந்தார்.

வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசையன்று ஜீவசமாதி அடையபோவதாகவும், அந்த இடத்தில் கோயில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் மடிபிச்சை பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.

அதன்படி அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு விழா கடந்த 26ம்தேதி பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டு தொடங்கியது. 27ம்தேதி கூழ்வார்த்தல் விழா நடந்தது. முக்கிய நிகழ்வாக ஆடி அமாவாசை தினமான நேற்று 186ம் ஆண்டு ஆறுமுக சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10 மணிக்கு பக்தர்கள் காவடியும் எடுத்தனர்.

மதியம் 1 மணியளவில் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி கோயில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர். இதை பெண்கள் கோயில் அருகில் உள்ள குளக்கரையின் படியில் வைத்து மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Arumuka , Arumuga Swami Guru Puja Festival; Women who ate mud rice to pray for a child
× RELATED ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களும் அதன் பணிகளும்