×

எடப்பாடி, ஓபிஎஸ்சை புறக்கணித்த மோடி; தமிழகத்தில் பாஜ தலைமையில்தான் கூட்டணி.! நிர்வாகிகளுக்கு மோடி உத்தரவு: அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னைக்கு வந்த மோடியை தனியாக சந்தித்துப் பேச விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுத்ததோடு, தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி மாநில நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதிமுகவில் தலைமை பதவியைப் பிடிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடைந்தது. நிர்வாகிகள் பெரும்பான்மையோர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கமும், தொண்டர்கள் பெரும்பான்மையானோர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, சின்னம், ஆகியவற்றுக்கு இருவரும் போட்டி போடுகின்றனர். இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளனர்.

இதனால் மோடியின் ஆதரவு இருந்தால் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இரு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த மோதலுக்கிடையே திடீரென, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வேட்பு மனு தாக்கலுக்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். மோடியின் பின்னால் அமர்ந்திருந்தார். இதனால் மோடி தனக்குத்தான் ஆதரவாக உள்ளார் என்று வெளியில் கூறி வந்தார். இதனால், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழியனுப்பு விழாவுக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் பன்னீர்செல்வம், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் தனது நெருக்கமான ஆதரவாளரான வேலுமணி, தளவாய்சுந்தரம் ஆகியோரை மட்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.

கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களை அவர் அழைத்துச் செல்லவில்லை. இந்தநிலையில், டெல்லியில் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவுக்கு வந்த மோடி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இருந்த இடத்துக்கு வந்தார். அப்போது, இருவருக்கும் வணக்கம் தெரிவித்த மோடி, அண்ணாமலையிடம் மட்டும் அதிக நேரம் பேசியபடி புறப்பட்டுச் சென்றார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். முதல்வராக இருந்தபோது தனக்கு முக்கியத்துவம் அளித்த மோடி, தற்போது கண்டுகொள்ளவில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் கொட்டித் தீர்த்தார். அதேநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி, ஒரு கடிதத்தை மோடியிடம் கொடுத்தார். ஆனால் அதை வாங்காத மோடி, அமித்ஷாவை சந்தித்துக் கொடுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை மூலம் நேரம் கேட்டார். ஆனால் அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை.

அண்ணாமலையும் அந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் போனையே எடுக்கவில்லை. இதனால் கடும் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி, தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விட்டார். இந்தநிலையில் சென்னையில் செஸ் போட்டியை தொடங்கி வைக்க வந்த மோடியை வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கேட்டு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டனர். ஆனால் வரவேற்பு கொடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி வழங்கி பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது.

இதனால் மோடியை பழனிச்சாமி வரவேற்றார். வழியனுப்ப அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் மோடியை வரவேற்க பன்னீர்செல்வத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர் மோடியை வழியனுப்பி வைக்க மட்டும் வந்தார். அதேநேரத்தில் நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அனுமதி கேட்டனர். ஆனால் இருவரையும் சந்திக்க மோடி மறுத்து விட்டார். அதேநேரத்தில் ஒன்றிய அமைச்சர் முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உள்பட 17 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள், மோடியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசினர். அப்போது, தமிழகத்தில் அதிமுக தற்போது இரண்டாக உடைந்து விட்டது.

தொண்டர்கள் சரிசமமாக பிரிந்து விட்டனர். இனி அதிமுகவை நம்பி பலன் இல்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. அதற்கு பாராட்டுக்கள். இதனால் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும். வருகிற மக்களவை தேர்தலில் அதற்கான பணிகளை தொடங்குங்கள். தமிழகத்தில் வெற்றி, தோல்வி எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இனி வளர்ச்சிதான் முக்கியம் என்று எடுத்துக் கூறினார். அதேநேரத்தில், முருகனுக்கும், அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோருக்கிடையே உள்ள மோதலை பெரிதாக்காமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பணிகளை செய்ய வேண்டும் என்று மறைமுகமாக ஆலோசனைகளை வழங்கி அனுப்பி வைத்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : edapadi ,Modi ,OPS ,Baja ,Tamil Nadu , Edappadi, Modi ignores OPS; In Tamil Nadu, the alliance is under the leadership of the BJP. Modi orders administrators: AIADMK leaders shocked
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...