கொரோனா சிறப்பு முகாமில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி; மத்திய பிரதேச நர்சிங் மாணவர் கைது

சாகர்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் ஒரே சிரிஞ்ச் மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட நர்சிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் சாகரில் செயல்படும் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில், அரசு மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்கள் பள்ளி, மாணவ மாணவியருக்கு தடுப்பூசி போட்டனர். 15 வயதுக்கு மேற்பட்ட ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம்  வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட நர்சிங் கல்லூரி மாணவர் ஜிதேந்திர அஹிர்வார் என்பவர், ஒரே சிரிஞ்ச் மூலமாக பல மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போட்டதை அங்கிருந்த பெற்றோர் சிலர் பார்த்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அவர் சிரிஞ்சியை மாற்றாமல் ஒரே சிரிஞ்சியில் தடுப்பூசி போடுவதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் செய்தனர். இதையறிந்த ஜிதேந்திர அஹிர்வார், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சாகர்  மாவட்டப் பொறுப்பாளர் க்ஷிதிஜ் சிங்கால் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட ஜிதேந்திர அஹிர்வார், கிட்டத்தட்ட 39  மாணவர்களுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போட்டுள்ளார். பெற்றோரின்  எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து தப்பியோடினார். மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி ஷோபராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட 39 மாணவர்களையும் அடையாளம் கண்டு மருத்துவ  பரிசோதனைகளை நடத்தி உள்ளோம். அவர்கள் இயல்பு நிலையில் உள்ளனர்’ என்றார்.

Related Stories: