துணைவேந்தரை கண்டித்து பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்; தேர்வு முடிவுகள் தாமதமாகும்

ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை கண்டித்து, தேர்வுத்தாள் திருத்தும் பணியை தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் புறக்கணித்துள்ளதால், மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை இரண்டாம் பருவத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. வரலாறு பாடத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதால், மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், கேள்வித்தாள்களில் குளறுபடிகளுடன் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி, பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு இணைந்து பல்கலைக்கழகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். பின்னர், அனுமதியின் பேரில் துணை வேந்தரை சந்தித்து மனு கொடுக்க சங்க நிர்வாகிகள் சென்ற போது, அவர்களை சந்திக்காமல் துணை வேந்தர் ஜெகநாதன் வெளியே சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசார், ஓமலூர் தாசில்தார் வல்லமுனியப்பன் ஆகியோர், துணைவேந்தரிடம் பேசி மனுவை பெற ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், நேற்று முதல் பல்கலைக்கழக தேர்வுத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தரை கண்டித்தும், ஆசிரியர்களை மதிக்காத அவரது செயலை கண்டித்தும், ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், இரண்டாம் பருவத்தேர்வு தாள்களை திருத்தும் பணிகளை நிறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், உரிய நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட முடியாத நிலையும், மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே தகுதியில்லாதவர்களை கொண்டு தேர்வுத்தாள் திருத்தும் பணியை, பல்கலைக்கழகம் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யும்போது மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படும், முறையாக ஒருங்கிணைப்பு குழுவை அழைத்து பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுசெயலாளரும், பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: