யானைக் கவுனி இரயில்வே மேம்பாலப் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேயர் பிரியா: ககன்தீப் சிங் பேடி, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: சென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள யானைக் கவுனி இரயில்வே மேம்பாலப் பணியினை மேயர் பிரியா நேரில் பாரவையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ககன்தீப் சிங் பேடி, எம்.சிவகுரு பிரபாகரன், எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.       

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் ரூ.30.78 கோடி திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் யானைக் கவுனி இரயில்வே மேம்பாலப் பணியினை மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-57ல் அமைந்துள்ள யானைக் கவுனி மேம்பாலமானது சென்ட்ரல் இரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதைகளுக்கு மேல் அமைந்துள்ளது.

இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், இராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான போக்குவரத்து பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பாலத்தில் 50 மீ. நீளமுள்ள பகுதி இரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்பொழுது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீ. அளவிற்கு இரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இருபுறமும் 364.23 மீ. அளவிற்கு சாய்தள சாலை பெருநகர சென்னை மாநகராட்சியாலும் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அதனடிப்படையில், வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீ. மற்றும் இராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீ. நீளத்திற்கு சாய்தள சாலை மாநகராட்சியின் சார்பில் அமைக்க ரூ.30.78 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பங்கள் கோரப்பட்டன. தற்பொழுது இந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர் பிரியா மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாய்தள சாலை அமைக்கும் பணிகளை விரைவுப்படுத்தவும், அடுத்த மூன்று மாதக் காலத்திற்குள் இந்தப் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், இரயில்வே துறையின் மூலம் அமைக்கப்பட வேண்டிய 156.12 மீ. நீளமுள்ள இருப்புப் பாதையின் மேல் அமைக்கப்பட வேண்டிய பாலப்பகுதியினை துரிதப்படுத்த இரயில்வே துறை அலுவலர்களுடன் ஆலோசிக்கவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது. அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: