கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை : காவல்துறை அறிக்கை!! ..

சென்னை :கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த, கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி, கடந்த 13ம் தேதி அதிகாலை விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவி மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், மறு உடற்கூறாய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன் கலவரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வு பிரிவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

மேற்கண்ட உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி சதீஷ்குமார் ஆணையிட்டு இருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறை தரப்பு வழக்கறிஞர், 2 உடற்கூறாய்வு முடிந்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் இறுதி சடங்குகள் முடிக்கப்பட்டதாகவும் அதற்கான முழு வீடியோபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்று மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், டிஐஜி தலைமையில் கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. கலவரத்தின் போது வதந்தி பரப்பிய 63 யூடியூப் இணையதளங்கள், 31 ட்விட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவி மரணம் தொடர்பான விசாரணையும் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடந்து வருகிறது. இது தவிர பள்ளியின் தாளாளர் மீது ஏற்கனவே உள்ள ஒரு வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம்.

எனவே கள்ளக்குறிச்சி பள்ளி மரண வழக்கில் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரையும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை. தமிழக முதல்வரின் அறிவுரையை ஏற்று, 27ம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது,என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி, பள்ளியை விரைவில் தொடங்கி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: