கன்னியாகுமரி, குழித்துறையில் ஆடி அமாவாசை தினத்தில் பலி தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்-முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி சாமி தரிசனம்

கன்னியாகுமரி :ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா  பயணிகள் வந்து செல்கின்றனர். ஆடி அமாவாசை போன்ற நாட்களில் கன்னியாகுமரியில்  முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி, இறந்த  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று ஆடி அமாவாசை என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி  உள்பட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பமாக  கன்னியாகுமரியில் குவிந்தனர்.

பின்னர் முக்கடல் சங்கமத்தில் அதிகாலை 4  மணி முதல் புனித நீராடி இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து  தர்ப்பணம் கொடுத்தனர். அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர்  கோயில், பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆடி  அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவதற்கு  வசதியாக பகவதி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் படித்துறையின்  பக்கவாட்டில் இரும்பு குழாய் பொருத்தப்பட்டு இருந்தது.

இது தவிர  கடலுக்குள் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இரும்பு சங்கிலி  கோயில் நிர்வாகம் சார்பில் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2  ஆண்டுகளுக்கு பிறகு ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில்  புனித நீராட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால்  முக்கடல் சங்கமம் கடற்கரை  பகுதியில் அதிகாலை முதல் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள்  குவிந்தனர்.

பக்தர்களின் வசதிக்காக காவல்துறை சார்பில்,  பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருசக்கர வாகனங்களை  நிறுத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திருட்டு உள்பட குற்ற செயல்களை தடுக்க போலீசார் மாற்று உடையில் வலம் வந்தனர். டிஎஸ்பி ராஜா தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்தனர்.

குழித்துறை:  குழித்துறை தாமிரபரணி நதிக்கரையில் நேற்று காலை ஆடி அமாவாசையை முன்னிட்டு  பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

தொடர்ந்து முன்னோர்களை  நினைவு கூறும் வகையில் வாழை இலையில், எள், பூ,  சந்தனம்,  பச்சரிசோறு, தீர்த்தம் போன்ற பொருட்களை படைத்து மந்திரங்கள் முழங்க பலி தர்ப்பணம் செய்தனர். பின்னர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். தொடர்ந்து அருகில் உள்ள மகாதேவர் கோயில், சாமுண்டேஸ்வரி அம்மன் கோயில்,  வெட்டு வெந்நி சாஸ்தா கோயிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்  செய்தனர். வாவுபலி திடலில் சென்று முன்னோர்கள் நினைவாக மரக்கன்றுகள், பூச்செடிகளை வாங்கி   சென்றனர்.

பக்தர் பலி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று காலை பக்தர் ஒருவர் தர்ப்பணம் முடித்து விட்டு, ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவரை மீட்டு ஆட்டோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனே தெரியவில்லை. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கோட்டாறு செட்டித்தெருவை சேர்ந்த மார்த்தாண்டம் பிள்ளை மகன் கிருஷ்ணன்(41) என்பது தெரியவந்தது. திருமணமாகாத அவர் முறுக்கு வியாபாரம் செய்துவந்தார். ஆடி அமாவாசைக்கு திதி கொடுக்க வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: