பெண்கள் தனியாக வெளிநாட்டுக்குச் செல்ல கெடுபிடி

நேபாளத்தில், நாற்பது வயதிற்குள் இருக்கும் பெண்கள் வெளிநாடு செல்ல இனி ஆண் குடும்ப உறுப்பினர்களின் அனுமதி தேவை என அந்நாட்டு அரசு முன்வைத்துள்ள புதிய சட்டத் திருத்தத்திற்குப் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. நேபாளத்தில் 2015 நிலநடுக்கத்திற்குப் பின் மக்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்தனர். ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைவாக இருந்த நிலையில் இந்த பேரழிவு மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது. இதனால்,  பலரும் வளைகுடா நாடுகளுக்கு தங்கள் பிழைப்பை தேடி தஞ்சம் புக ஆரம்பித்தனர். இளம் பெண்கள் ஆண்கள் என அனைத்து தரப்பினரும், தங்கள் குடும்பத்தைக் காக்கப் பல நாடுகளுக்கு வீட்டு வேலைக்கும், கடுமையான பணிகளுக்கும் செல்ல துவங்கினர்.  

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கடத்தல் தொழில் செய்யும் கும்பல்களும் பெருகி வந்தன. அந்த காலகட்டத்தில் இணையத்தில் வளர்ச்சியும் அதிகரித்திருந்ததால், சமூக ஊடகங்களின் வழியாகப் பலவீனமானவர்களிடம் நட்பு பாராட்டி, அவர்கள் குடும்ப சூழ்நிலையை தெரிந்துகொண்டு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அவர்களை வெளிநாட்டிற்கு வரவழைத்துள்ளனர். வெளிநாட்டில், சொந்த ஊருக்குத் திரும்பிப் போக முடியாதபடி, நவீன கொத்தடிமைகளாகவும், பாலியல் தொழிலிலும் விற்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக உறுப்பு தானங்கள் செய்யவும் இந்த கும்பல் செயல்பட்டுள்ளது.

இதனால் 2017ல் நேபாள அரசு, தன் குடிமக்களைக் குறிப்பிட்ட சில வளைகுடா நாடுகளுக்கு, வீட்டு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியது. ஆனாலும், எல்லையில் அதிகாரிகள் சிலர் சட்டத்திற்கு விரோதமாகச் சரியான ஆவணங்கள் இல்லாத போதும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மக்களை அனுப்பியுள்ளனர். நேபாளத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையில், 2018 ஆம் ஆண்டில் சுமார் 15,000 ஆண்கள், 15,000 பெண்கள் மற்றும் 5,000 குழந்தைகள் கடத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் 6% சதவீத மக்கள், நேபாளத்தில் கடத்தலில் பாதிக்கப்படக்கூடிய அபாயமான சூழ்நிலையில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. பலரும் வேலைக்காகவும், திருமணமாகியும் வெளிநாட்டிற்குச் செல்கின்றனர், ஆனால் அவர்கள் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, வாழ்நாள் முழுக்க பிணைக்கப்பட்ட அடிமைகளாக பல நாடுகளில் வசிக்கின்றனர். பல வருடங்களாக இருக்கும் இந்த பிரச்சனையை அரசாங்கம் தீவிரமாக அணுகவில்லை என சமூக அமைப்புகள் குற்றம் சாட்டி வந்தனர். இப்போது அதன் தீர்வாக அரசு 40 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வளைகுடா நாடுகளுக்கும் ஆப்ரிக்காவிற்கும் தனியாகப் பயணம் செய்வதற்கு முன்பு ஒரு ஆண் பாதுகாவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் பிறப்பித்துள்ளது.

இந்த திட்டத்தினை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம், இந்த கடத்தல் கும்பலால் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்தான். இங்குச் சொந்த நாட்டில் தகுந்த வேலையில்லாத காரணத்தினாலேயே பலர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். சொந்த நாட்டில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு முதலில் முயல வேண்டும் என்கின்றனர். அடுத்து, பெண் குழந்தைகளைவிட, ஆண்குழந்தைகளின் கல்வியே முக்கியம் என நினைக்கிறோம். நேபாளத்தில் பெண்கள் பலரும் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்து, வீட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு கல்வியறிவை வழங்க முயற்சிகள் செய்தால்தான் இந்த பிரச்சனையை ஆழமாக அணுக முடியும்.

இது தவிர, வேலை வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகளை முறையாகச் சோதித்து, அங்கு குடிமக்கள் பாதுகாப்பான முறையில் வேலை செய்வதையும் உறுதி செய்ய வேண்டும். இப்படிப் பல கோணங்களில் அணுக வேண்டிய பிரச்சனையை, பெண்களின் பார்வையில் மட்டும் அணுகுவது தவறு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் பல பெண்கள் வசிக்கும் இடத்திலும் சரியான வேலை இல்லாமல், வெளிநாட்டிற்கும் போக முடியாமல் துன்புறுவர்.

பல வருடமாக நடந்துவரும் இந்த பிரச்சனையின் தீவிரம் புரிந்தும், பெண்கள் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்ல துணிய ஒரே காரணம், குடும்ப சூழ்நிலைதான். எனவே, பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, தீவிரமான ஒரு பிரச்சனைக்கு மேம்போக்கான ஒரு தீர்வை வழங்குவதை எதிர்த்து, அந்நாட்டு நிபுணர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். இந்த திட்டம் வெறும் முன்மொழியப்பட்டதுதான் என்றாலும், இந்த தீர்மானம் பெரும் ஆபத்தினை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>