ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஜோலார்பேட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாமலேரி முத்தூர் கிராமத்தில் முட்புதர் அடர்ந்த மறைவான பகுதியில் சாராயம் விற்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சங்கர்(35), அவரது உறவினர் அருண்மொழி(42) என்பதும், கூட்டாக சேர்ந்து சாராயம் விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், சாராயம் விற்றதாக ஜோலார்பேட்டை அடுத்த சக்கரக்குப்பம் பகுதியில் எழிலரசன்(19), கோடியூர் பகுதியில் நவீன்குமார்(19) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், சங்கர், அருண்மொழி, எழிலரசன், நவீன்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: