×

தமிழகத்தில் 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அகமதாபாத் புறப்பட்டார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மதியம் தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று தொடங்கி வருகிற 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தார். அவரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கனிமொழி எம்பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்று கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை வரவேற்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து நாட்டு செஸ் வீரர்களும் ரசித்து பார்த்தனர். இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு முன்னிலை வகித்தார். விழா முடிந்ததும் நேற்று இரவு சென்னை, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இரவு தங்கினார்.

பின்னர் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் சென்ற பிரதமர் மோடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து நேராக சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 12 மணிக்கு சென்றார்.

இதையடுத்து சென்னையில் இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராத்தாக்கூர், எல்.முருகன், தயாநிதி மாறன் எம்பி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அரசு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

Tags : Modi ,Ahmedabad ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin , Prime Minister Modi left Ahmedabad this afternoon after completing a 2-day visit to Tamil Nadu; Chief Minister M.K.Stalin sent the way
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி