இளைஞர்களுக்கு அரசு வேலை தருவதாக ஏமாற்றிய முதல்வர் ஜெகன்மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-தெலுங்கு தேசம் கட்சியினர் போலீசில் மனு

திருப்பதி : ஆந்திர மாநிலத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலை  தருவதாக ஏமாற்றிய முதல்வர் ஜெகன்மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அமைப்பினர் போலீசில் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பதியில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் ரவி தலைமையில் கட்சியினர் பஜார் தெருவில் இருந்து சைக்கிள் ரிக்‌ஷா மூலமாக மேற்கு காவல் நிலையம் வரை ஊர்வலமாக வந்தனர்.  அங்கு முதல்வர் ஜெகன்மோகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த தேர்தலின்போது மாநிலத்தில் காலியாக உள்ள 2 லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவேன் என்று கூறி இளைஞர்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி புதிய வேலை வாய்ப்பு காலண்டரை வெளியிடுவேன் என கூறினார். 3 ஆண்டுகள் முடிந்தும் 2 லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பவில்லை. இன்னும் மெகா டிஎஸ்சி அறிவிக்கவில்லை. ஜனவரி 1ம் தேதி வேலை நாட்காட்டியை அறிவிப்போம் என்றார்கள்.

ஜனவரி 4 ஆகிறது. ஆனால், வேலை காலண்டர் இன்னும் அறிவிக்கவில்லை. வேலை கிடைக்கும் என்று நினைத்து கடன் வாங்கி, கோச்சிங் சென்டரில் கோச்சிங் எடுத்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களை ஏமாற்றிய முதல்வர் ஜெகன்மோகன் மீது வழக்கு பதிவு செய்து 2 லட்சத்து 35 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பேசிய வீடியோக்கள், பேப்பர் கட்டிங்ஸ், ஆதாரங்களுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: