×

கும்பகோணம் காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்-தானமாக தானியம், உடை அளித்தனர்

கும்பகோணம் :  கும்பகோணத்தில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
ஆடி அமாவாசை நாள் என்பது பித்ரு தர்ப்பணம் செய்வதற்கான முக்கியமான நாட்களில் பிரத்யேகமான நாள் ஆகும். இந்த நாளில் நாம் சில பொருட்களை தானமாக தர வேண்டும். பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது ஏழைகளுக்கு உணவு, ஆடை மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பாகும். தானத்தில் சிறந்த ஒன்றான அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும், பித்ருக்களின் முழு ஆசீர்வாதம் கிடைக்கும், தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவரின் ஆசிகள் கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகமாக கருதப்படுகிறது.

சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்கும் நாள் அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள் ஆகும். இந்த நாளில் தான் தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் சந்திரனும், சூரியனும் இணைகிறார்கள் என்பதாகும். எனவே, நம்முடைய முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதால் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது.

எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் இந்த நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது. எனவே, இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும், தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும், நமக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்றும் கூறப்படுகிறது.

அதன்படி நேற்று ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கும்பகோணம் காவிரிக்கரையில் அமைந்திருக்கும் டபீர் படித்துறை, பகவத் படித்துறை, அண்ணலக்ரஹாரம் அரசலாறு படித்துறை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் அவர்களது முன்னோர்களுக்கு பிடித்த காய்கறிகள் மற்றும் உணவுகளை படைத்தும், எள், நவதானியம் வைத்து யாகம் செய்தும் தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தானியம், உடைகளை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தனர். இதனை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க அந்தந்த படித்துறைகளில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவையாறு: திருவையாறு புஷ்ப மண்டப காவிரி படித்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் புனித நீராடினார்கள். பிறகு காவிரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் தன் குடும்பத்தில் இறந்து போன முன்னோர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்தனர். பிறகு ஐயாறப்பர் கோயிலில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். கோயிலில் இருந்து ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் சுவாமி புறப்பட்டு திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் சூழபானிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

பின்னர் சாமி புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தது. இதனால் திருவையாறு விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு போலீஸ் டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் செய்திருந்தனர்.

Tags : Kumbakonam Cauvery , Kumbakonam: In Kumbakonam, a large number of people offered tarpanam to their ancestors on the occasion of Adi Amavasai yesterday.
× RELATED கும்பகோணத்தில் காவிரிக்கரையின்...