ஆடி அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கம்பம் :ஆடி அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், புண்ணியதலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், சுருளிவேலப்பர் கோயில், சுருளிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில், கன்னிமார் கோயில் புகழ் பெற்றவை.

 இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் நாள்தோறும் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர்.இங்கு ஆண்டுதோறும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகா சிவாராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாட்களில், இராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக சுருளி அருவிப்பகுதியில் இறந்த முன்னோர்களுக்கு திதி, மற்றும் ஆத்ம சாந்தி வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

நேற்று ஆடிஅமாவாசையை முன்னிட்டு அதிகாலையிலிருந்தே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்தனர். அருவியில் நீராடிய பின்னர் அருகே உள்ள சுருளி அருவி ஆற்றில் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து கோவில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டப்படுத்த கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையில், எஸ்ஐ மாயன் உட்பட ஏராளமான போலீசாரும், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

*ஆதி ஆண்ணாமலையார் கோயிலில் உள்ள லிங்கத்திற்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பதினெட்டு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பூஜாரி முருகன் சிறப்பு வேள்வி யாகத்துடன் பூஜை செய்தார். ஆதி ஆண்ணாமலையார் பக்தர்களுக்கு வில்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். காலை முதல் மாலைவரை அன்னதானம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த சுருளிபட்டியிலிருந்து சுருளி அருவிக்கு செல்ல ஒரு வழிபாதை செயல்படுத்தப்பட்டது. ஆடி அமவாசையை முன்னிட்டு நேற்று ஒருநாள் மட்டும் சுருளி அருவிக்குள் செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடம் வனத்துறையினர் நுழைவு கட்டணம் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லையாற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து ஆற்றில் தீர்த்தமாடி தங்களது முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர்கள் மூலமாக எள், பச்சரிசி, தர்ப்பைப்புல் கொண்டு தர்ப்பணம் செய்தனர். இதேபோல, தேனி நகரில், சுப்பன்தெரு திட்டச்சாலையில் கொட்டக்குடி ஆற்றின்கரையோரம் அமைந்துள்ள சடையாள் முனீஸ்வரர் கோயிலில் காலை 9 மணியில் இருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முனீஸ்வரரை வழிபட்டு அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: