×

பந்தலூரில் அரசு தலைமை மருத்துவமனையை ரூ.30 கோடியில் மேம்படுத்த திட்டம்-சுகாதாரத்துறை இணை இயக்குனர் தகவல்

பந்தலூர் :  பந்தலூர் அரசு தலைமை மருத்துவமனையை ரூ.30 கோடியில் மேம்படுத்த அறிக்கை அனுப்பியுள்ளோம் என சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம் நகராட்சி மற்றும் சேரங்கோடு ஊராட்சி, நெலக்கோட்டை ஊராட்சி பகுதிகளில் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில், பெரும்பான்மையாக தோட்டத் தொழிலாளர்களும் விவசாய கூலிகளும், சிறு குறு விவசாயிகளும் உள்ளனர்.

இந்த பகுதிக்கு பந்தலூர் அரசு தலைமை மருத்துவமனை மட்டுமே  மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது. தனியார் மருத்துவமனை இல்லாத நிலையில் ஒரு சில கிளினிக்குகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. 1998ம் ஆண்டு பந்தலூர் தனி வட்டமாக பிரிக்கப்பட்டதன் பின்னர் பந்தலூர் அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தாலுகா மருத்துவமனையாக செயல்பட்ட போதும் பல ஆண்டுகளாக  ஒற்றை மருத்துவர் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் தற்போது 5 மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ பிரிவு, எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, காசநோய், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு என பல பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஆண், பெண் என தனி தனியாக 2 வார்டுகளும் உள்ளது. தற்போது, தினசரி வெளி நோயாளிகளாக 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள் நோயாளிகளுக்கு இதுவரை உணவு வழங்காமல் இருந்து வந்த நிலையில்  கடந்த சில மாதங்களுக்கு முன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவின் பேரில் மருத்துவ துறை மூலம் நடவடிக்கை எடுக்கபட்டு தற்போது மருத்துவமனையில்  உணவு தயாரித்து 3 வேலையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

50 ஆண்டு பழமையான மருத்துவமனை கட்டிடங்கள் என்பதால் பிரசவ பிரிவு, குடியிருப்புகள், உள் நோயாளி பிரிவு, பிணவறை உள்ளிட்டவை மேற்கூரை பழுதடைந்து ஒழுகியது. இதனால், நோயாளிகள் மிகவும் சிரமமப்பட்டனர். அதுபோல மருத்துவமனை பணியாளர்கள் குடியிருக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து தற்போது மழையில் ஒழுகும் நிலையினை தவிர்க்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மேற்கூரை தகர சீட்டுகள் அமைத்து மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் புணரமைக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள நிலையில் இருந்து இந்த மருத்துமனை மேலும் மேம்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்கின்றனர்.

டிஜிட்டல் எக்ஸ்ரே வேண்டும்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,``பிரசவ பிரிவிற்கு மகளிர் சிறப்பு மருத்துவர், சிசேரியன் செய்வதற்கான மருத்துவர்கள் உதவியாளர்கள் நியமிக்க வேண்டும். நிறுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மீண்டும் செயலப்படுத்த வேண்டும்.

மேலும், இங்குள்ள எக்ஸ்ரே இயந்திரம் பழுதடைந்து உள்ளது. தற்போது நவீன தொழில் நுட்பம் உள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் வழங்க வேண்டும். தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் ஐசியூ வார்டு அமைக்க தரவேண்டும். வாரந்தோறும் சிறப்பு சிகிச்சையாக கண், காது, மூக்கு, தொண்டை, மகளிர் மருத்துவம் என்று சிறப்பு சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காலியாக உள்ள சிறப்பு மருத்துவர்கள், சித்தா மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் விரைவில் நியமித்து 24 மணி நேரமும் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதிகள் செய்து தரவேண்டும். ரத்த பரிசோதனை மற்றும் சிறப்பு பரிசோதனை மருத்துவமனையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண நோய்களுக்கும் இந்த மருத்துமனையில் சிகிச்சை கிடைக்காததால் மருத்துவ வசதி பெறுவதற்கு   இப்பகுதி மக்கள் கேரளா மாநிலம் வயநாடு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அதிக பணம் விரயம் செய்து வருகின்றனர். எனவே, பந்தலூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றார் .

சிக்கல் இருக்காது

சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிசாமியிடம் கூறுகையில்,``கூடலூர் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அதற்காக ரூ.30 கோடிக்கான மேம்படுத்தும் பணிக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம் அதன்பின் மக்களுக்கு மருத்துவம் பெறுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது. பந்தலூர் மருத்துவமனைக்கும் போதிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம்’’ என்றார்.

Tags : Government General Hospital ,Bandalur ,Joint Director ,Health Department , Bandalur: We have sent a report to upgrade the Bandalur Government General Hospital at a cost of Rs 30 crore, said the Joint Director of Health Department.
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை...