×

50 சதவீத கழிவுகள் தேக்கம் குந்தா அணையை தூர்வார மெகா திட்டம்-தடையில்லா மின் உற்பத்திக்கு வாய்ப்பு

மஞ்சூர் :  குந்தா அணையில் 50 சதவீத தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற ரூ.40 கோடியில் மெகா திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின்நிலையங்களில் மொத்தம் 833.65 மொவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கெத்தை மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் அணையில் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளன. பருவ மழைக்காலங்களில் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் செடி, கொடிகள், மரங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு அணையில் கலக்கிறது.

இதனால், குந்தா அணையில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன.  குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பிவிடும். மேலும் சேறு, சகதிகளால் அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின்நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன் உலக வங்கி நிதியுதவியின் மூலம் குந்தா அணையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதி மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வாகாததாலும், காலதாமதம் ஏற்பட்டதால் குந்தா அணை துார்வாரும் நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியம் தரப்பில் குந்தா அணை துார் வார மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.40 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்ட மதிப்பீடானது ஒன்றிய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குந்தா அணை முழுமையாக துார்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் உற்பத்தி விவரம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 12 நீர் மின் நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், குந்தா-60 மெகாவாட், கெத்தை-175, பரளி-180, பில்லுார்-100, அவலாஞ்சி-40, காட்டுகுப்பை-30, சிங்காரா-150, பைக்காரா-59.2, பைக்காராமைக்ரோ-2, முக்குருத்தி மைக்ரோ-0.70, மாயார்-36, மரவகண்டி-0.75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்டவையாக உள்ளது.

Tags : Kunta Dam Durvara , Manjoor: A mega project has been prepared at a cost of Rs. 40 crore to remove 50 percent of the accumulated waste in Kunta Dam. Kunta in Nilgiri district.
× RELATED தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி...