×

குருவிகுளம் அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருட்டு-செல்போன் மூலம் கண்காணித்தும் தப்பிச்சென்ற கொள்ளையர்கள்

திருவேங்கடம் : குருவிகுளம் அருகே அம்மன் கோயிலில் புகுந்த மர்மநபர்கள் நகை, உண்டியல் பணம், பொருட்களை திருடிச்சென்றனர். சென்னையில் இருந்தபடி செல்போனில் கண்காணித்து திருட்டை தடுக்க முயன்றபோதும் தப்பிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குருவிகுளம் அருகே செவல்குளத்தில் பிரசித்திபெற்ற ரேணுகாதேவி என்ற எல்லம்மன் கோயில் உள்ளது. தென்காசி மாவட்டம் மாரநேரி மற்றும் தேனியைச் சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும் இக்கோயிலின் நிர்வாகியாக கோவிந்தராஜன் உள்ளார். சென்னையில் பணியாற்றி வரும் இவரது மகன் சீனிவாசன், கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை செல்போன் இணைப்பு மூலம் தினமும் பார்வையிட்டு கோயில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடினர். பின்னர் அங்கிருந்த சில்வர் பானை, அம்மனுக்கு அணிவிக்கப்படும் பொட்டு தாலி நகை, வெள்ளி பட்டயம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். சம்பவம் நடந்தபோது சென்னையில் வசித்துவரும் கோயில் நிர்வாகி மகன் சீனிவாசன், தனது செல்போனில் கோயில் பாதுகாப்பு தொடர்பாக பார்த்தபோது மர்மநபர்கள் 2 பேர், கோயிலில் பொருட்களை திருடிக்கொண்டிருப்பது தொியவந்தது.

 இதையடுத்து அவர் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து திருட்டை தடுக்கும்படி கூறினார். இதையடுத்து கோயில் நிர்வாகி கோவிந்தராஜன், அப்பகுதி மக்களுடன் கோயிலுக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள், தப்பிச்சென்று விட்டனர். அப்போது அவர்கள் கோயிலில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சி பதிவான டிவிஆர் பதிவுகளையும் கையுடன் எடுத்துச்சென்றனர்.

 தகவலறிந்து விரைந்து வந்த குருவிகுளம் எஸ்.ஐ. வேல்துரை மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இதில்  ஈடுபட்டது விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இருவரும் உண்டியல் திருட்டில் கைதாகி தென்காசி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த இருநாட்களுக்கு முன் விடுதலையான இவர்கள் இருவரும் சிறையில் இருந்து ஊருக்கு ெசல்லும் வழியில் கோயிலில் கைவரிசை காட்டியிருக்க கூடும் என சந்தேகிக்கும் போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அய்யனார் கோயிலில் உண்டியல் திருட்டு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில்  அருகே அய்யனார் கோயிலில் காணிக்கை பணத்துடன்  உண்டியல் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை பதிவுசெய்யும் கருவி ஆகியவற்றை  திருடிச்ெசன்றவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

  சங்கரன்கோவில்  அருகே உசிலங்குளம் கிராமத்தில் உள்ள உச்சி  உடையார் அய்யனார் கோயிலில்  வேலுச்சாமி என்பவர் பூஜை செய்து வருகிறார்.  இவர் கடந்த 26ம் தேதி இரவு வழக்கம்போல் பூஜை முடிந்தபிறகு கோயிலை   பூட்டிச்சென்றார். பின்னர் மறுநாள் காலை திரும்பியபோது அங்கிருந்த   உண்டியல் மற்றும் சிசிடிவி காட்சி பதிவு செய்யும் கருவி ஆகியவற்றை   மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில்  வழக்குப் பதிந்த அய்யாபுரம்  போலீசார் மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : Amman ,Kuruvikulam , Thiruvenkadam: Mysterious persons entered Amman temple near Kuruvikulam and stole jewellery, money and other items. in Chennai
× RELATED விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில்...