×

கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான எப்.ஐ.ஆர் எண்ணுடன் மனுவை தாக்கல் செய்ய உத்தரவு...

விழுப்புரம்: கனியாமூர் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்த நிலையில் அவர் படித்த பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அதன் அடிப்படையில் ஜாமின் மனு தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கான எப்.ஐ.ஆர் எண்ணுடன் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் பள்ளியில் இறந்தார்.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று புகார் தெரிவித்தனர். இதனால், சந்தேக மரணம் என்று சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தமிழக அரசு அந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகி ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீப்ரியா, கிருத்திகா ஆகிய 5 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை சிபிசிஐடி ஒரு நாள் விசாரணை முடிந்து 5 பேரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில் 5 பேரும் ஜாமின் வழங்ககோரி நேற்று மகளிர் நீதிமன்றத்தில் அவர்கள் தரப்பில், பள்ளி நிர்வாகி இருவருக்கு ஒரு மனுவும், ஆசிரியர்களுக்கு ஒரு மனுவும் மற்றும் பள்ளி முதல்வருக்கு ஒரு மனுவாகவும் 3 மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்திருந்தனர்.

இந்த ஜாமின் மனு இன்று விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கீதா என்பவர் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதி இந்த மனுவில் உள்ள குற்ற எண்ணானது சின்னசேலம் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதியப்பட்ட குற்ற எண்ணை குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆனால், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி மாற்றப்பட்டு முதல் தாக்கல் அறிக்கை குற்ற எண் உள்ளது. அதனை பதிவு செய்யவேண்டும் என்பதால், இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இந்த ஜாமின் மனுவை திரும்பப்பெற வேண்டும் என்றும் வேறு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.   


Tags : Jam ,Kaniamore ,CBCID ,CPCID ,GI , கனியாமூர், நிர்வாகி, ஜாமின், மறுப்பு, சிபிசிஐடி, எப்.ஐ.ஆர், எண், மனு, நீதிபதி, உத்தரவு
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...