×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு ஒத்திவைத்தது உதகை மகளிர் நீதிமன்றம்

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்ட நிலையில் அதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கனகராஜ், சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீஷ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது.

குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு மேலாக, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த ஆண்டு புதிய திருப்பமாக இவ்வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், வழக்கானது முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் கூறி, வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை சார்பாக உதகை மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றனர். இவ்வழக்கில் புதிய திருப்பமாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் இவ்வழக்கில் 11,12-வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது வரை இவ்வழக்கிற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொடநாடு மேலாளர் நடராஜன், அதிமுக பிரமுகர் சஜீவன், சசிகலா, கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி உட்பட 267 பேருக்கும் மேலானோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்றையதினம், இவ்வழக்கு குறித்த விசாரணையானது உதகை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் ஷாஜகான் ஆகியோர், இவ்வழக்கில் தற்போது வரை 267 பேருக்கு அதிகமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், கடந்த வழக்கு விசாரணையின் போது சயான், கனகராஜ் வாகன விபத்து குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தும் என்று தெரிவித்திருந்தனர்.

பாலக்காடு அருகே நடந்த விபத்தில் சயானின் மனைவி, மகள் உயிரிழந்த நிலையில், அவற்றின் தடயங்கள் சேகரிக்கும் பணியானது கொரோனா பரவலால் சேகரிக்க முடியவில்லை என்றும், கனகராஜின் சாலை விபத்து குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதாலும் கூடுதல் அவகாசம் கேட்டனர். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், 2017ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின்போது தடயங்களை சேகரித்த தடயவியல் துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும் என்ற தகவலையும் அரசு தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Assistant Women's Court ,Kodanadu , Kodanad, Murder, Robbery, August 26, Utkai Women's Court
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...