திமுக முன்னாள் கவுன்சிலரை கார் ஏற்றி கொலை முயற்சி: போலீஸ் விசாரணை

சென்னை: சென்னையை அடுத்த புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜெ.கே. மணிகண்டன் (வயது 46). இவர், தற்போது சென்னை மாநகராட்சி 186-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். 2-வது மகன் ஜெ.கே.பர்மன் (42). இவர், தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். பர்மன் வீட்டுக்கு பக்கத்தில் வசிப்பவர் வேலாயுதம் இவருடைய மனைவி ஹேமாவதி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அங்கு வந்த துரைப்பாக்கம் கண்ணகிநகரைச் சேர்ந்த ஹேமாவதியின் உறவினர்கள், கத்தி கூச்சலிட்டு கலவரம் செய்தனர். இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பர்மன், தகராறு செய்தவர்களை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது ஹேமாவதியின் உறவினர்கள் குடிபோதையில் இருந்ததால் பர்மனிடம் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.

இதனால் பர்மனுக்கும், ஹேமாவதியின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை பர்மன், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென அவர் மீது மோதியது. உடனே சுதாரித்து கொண்ட பர்மன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டினார்.

எனினும் பொன்னியம்மன் கோவில் திருப்பத்தில் மீண்டும் வேகமாக வந்த கார் பர்மன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பர்மன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். பர்மனை, ஹேமாவதியின் உறவினர்கள்தான் கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: