×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி!: பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு.. இருசக்கர வாகன விற்பனை சரிவு..!!

சென்னை: பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் உயர்வால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இருசக்கர வாகனங்களின் பதிவு எண்ணிக்கை சரிந்துள்ளது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அன்றாட செலவையே எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

விளைவாக கார், இருசக்கர வாகனம் போன்ற தனி வாகன பயன்பாட்டை தவிர்த்து பொது போக்குவரத்தை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆன்டுகளாக கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பால் பொது போக்குவரத்தை தவிர்க்க மக்கள் விரும்பினாலும் நடைமுறை சிக்கல் காரணமாக பொது போக்குவரத்து தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. விளைவு தினசரி பணிக்கு செல்வோர், அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் பொது போக்குவரத்தையே நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகர பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கூட்ட நெரிசல், கால தாமதம் போன்ற அசவுகரியங்கள் இருந்தாலும் பொது போக்குவரத்தே தற்போதைய தீர்வு என்பது மக்களின் கருத்தாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க மக்கள் பொது போக்குவரத்தை நாடலாம் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. தமிழக அரசும் சென்னை போன்ற பெருநகரங்களில் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விளைவு, இருசக்கர வாகனங்களை புதிதாக வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது.

இதனை கடந்த ஆண்டுகளின் இருசக்கர வாகன பதிவு எண்ணிக்கைகளுடன், நடப்பாண்டு பதிவு எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பொது  போக்குவரத்தை பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


Tags : Petrol, Diesel Price, Public Transport, Number, Increase
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...