மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் வாதம்: பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தல்!!

டெல்லி : அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம்’ என தீர்ப்பு அளித்தது. கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது. எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது என தலைமை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பினர், அதிமுக பொதுக்குழுவில் கட்சியின்  முக்கியமான பல விதிகள் மீறப்பட்டுள்ளன. கட்சியின் அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்துள்ளனர். ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது, என்று தெரிவித்தனர்.

மேலும் எத்தனை வழக்குகள் தொடுத்துள்ளீர்கள், சமரசமாக செல்ல வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு பதில் அளித்தது. மேலும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று பன்னீர் தரப்பு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் 3 வாரத்திற்குள் பன்னீர் செல்வம் கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே நடந்து முடிந்ததை மாற்ற முடியாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.

Related Stories: