×

கொடைக்கானல் அருகே தொடர் கனமழை காரணமாக வத்தலகுண்டு சாலையில் மண்சரிவு.. மக்கள் அவதி

திண்டுக்கல்: கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் இருந்து வத்தலகுண்டு செல்லக்கூடிய சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக அவ்வப்போது மிதமான மழையும், கனமழையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மிகக் கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று இரவு, கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி பகுதியில் 11 செ.மீ. மழையானது பதிவானது. இந்த கனமழை காரணமாக தாண்டிக்குடி- வத்தலகுண்டு செல்லக்கூடிய பிரதான சாலையில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் வத்தலகுண்டு- தாண்டிக்குடி செல்லக்கூடிய அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பட்லங்காடு அருகே நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலக்குண்டில் இருந்து பண்ணக்காடு வழியாக தண்டிக்குடிக்கு பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும், சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சரிசெய்வதற்கு தற்போது வரை எந்த அதிகாரிகள் வரவில்லை என குற்றம்சாட்டினர். சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீர்செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்தனர்.   


Tags : Kodaikanal ,Wathalakuntu Road , Kodaikanal, heavy rain, Vatthalakundu, road, landslide, people, Avadi
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்