நெல்லை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலி

நெல்லை: நெல்லை அருகே லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள சோதனைச்சாவடி அருகில் உள்ள பேரிகார்டர் மீது மோதாமல் இருப்பதற்காக, லாரியை திருப்பிய பொழுது இந்த கோரா விபத்து நிகழ்ந்தது. பாண்டிச்சேரியில் இருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு லாரி ஒன்று சவுக்கு கட்டைகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. அதிவேகமாக வந்த லாரி, சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்ட பேரிகார்ட் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை திருப்பியபொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

அப்பொழுது, லாரியின் முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற தென்காசி மாவட்டம் ஊத்துமலையை சார்ந்த மதியழகன் என்பவர் மீது மோதி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்த சிசிடிவி வெளியான நிலையில், காட்சிகளின் அடிப்படையில் கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தியபொழுது, லாரியை ஓட்டுவந்தவர் நெல்லையை சேர்ந்த இமானுவேல் என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்த போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இறந்த மதியழகனின் உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இறந்தவரின் மனைவி சாத்தூரில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.               

Related Stories: