யோகா

நன்றி குங்குமம் டாக்டர்

யோகா பெரும்பாலும் நமது உடல் நோய்களை மென்மையான முறையில் குணப்படுத்தும் ஓர் உடற்பயிற்சியாக இருக்கிறது. சமீபகாலமாக யோகா குறித்து பெரிதும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பலரும் அதனைப் பின்பற்ற முயன்றும் வருகிறார்கள். இந்த தருணத்தில், அதனை முறையாக ஒரு பயிற்சியாளரிடம் கற்றுக் கொண்டு, முறையாக செய்வதும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘முறையாக யோகா செய்யாதபட்சத்தில் அது காயங்களை ஏற்படுத்தும். ஏற்கெனவே உள்ள காயங்களை அதிகப்படுத்தும் வாய்ப்பும் உண்டு’ என்று Bodywork and Movement Therapies இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் 354 பேர் தங்கள் வயது, யோகா அனுபவம் மற்றும் ஆய்வின் தொடக்கத்தில் அவர்கள் அனுபவித்த பலவிதமான வலி மற்றும் காயங்கள் பற்றிய கேள்விகளுக்கு ஒரு வருடம் கழித்து பதிலளித்தனர்.

யோகா 10 சதவிகித மக்களுக்கு தசைக்கூட்டு வலியை(Musculoskeletal) ஏற்படுத்தியதாகவும், ஏற்கெனவே உள்ள 21 சதவிகித காயங்களை மோசமாக்கியுள்ளதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 10 சதவிகித காயங்கள் அனைத்துவித விளையாட்டுகளால் ஏற்படும் காயங்களின் விகிதத்துடன் ஒப்பிடத்தக்கதாக இருந்தது. யோகாவுடன் தொடர்புடைய பெரும்பாலான புதிய வலிகள் மக்களுடைய தோள்பட்டையின் மேல்முனைகள், முழங்கைகள், மணிக்கட்டு மற்றும் கைகளுடன் தொடர்புடையதாக இருந்தது.

இந்த வலிகளால் அந்தப் பகுதிகளில் ஒருவித அழுத்தம் இருப்பதோடு, ஏதோ ஒரு பளுவை அப்பகுதியின் மீது வைத்தது போன்று இருக்கும். இந்த காயங்களில் மூன்றில் ஒரு பங்கு, மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால் மக்கள் யோகா செய்கிற நடைமுறையை கைவிட்டனர். இதே ஆய்வில் முறையாக யோகா செய்த 44 சதவிகிதம் பேர் யோகா தங்கள் உடல்வலியில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றும், மூன்றில் இரண்டு சதவிகிதம் பேர் எலும்பு, தசை, மூட்டு வலி, குறிப்பாக கழுத்து மற்றும் முழுகுவலி ஆகியவற்றை மேம்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.   

தொகுப்பு: க.கதிரவன்

Related Stories:

>