×

அனைத்து போக்குவரத்து கழக வழக்கறிஞர்களுக்கு உதவ ஒருங்கிணைப்பு அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போக்குவரத்து கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சோமந்தர்குடியை சேர்ந்த பி.நடராஜன், உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ல்  தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற எனக்கு வரவேண்டிய பென்சன் உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கபடவில்லை. எனவே, எனக்கு சேர வேண்டிய பணிக்கால மற்றும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கில் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்து கழகம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, பல்வேறு வழக்குகளில் போக்குவரத்து கழகங்களின் தரப்பில் வழக்கறிஞர்களோ, சட்ட அதிகாரிகளோ ஆஜராவதில்லை. அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நீதிமன்றத்தில்  முடிவை எட்ட முடியாது.

எனவே, அரசு போக்குவரத்து கழகங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும், அதன் நிர்வாக இயக்குனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு உதவவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags : All Transport Corporation Advocate, Coordinating Officer, High Court Order
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...