ஒன்றிய அரசு மறுத்த நிலையில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17 கல்லூரிகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது 6 மாவட்டங்களில் மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகக் கூடிய இலக்குதான் என்பதால் நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா மூன்று மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் அமைக்க முன்வர வேண்டும்.

அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: