ஆசிய கோப்பை அமீரகத்துக்கு மாற்றம்

மும்பை: இலங்கையில் அடுத்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) மாற்றப்பட்டுள்ளது. ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரின் (ஆகஸ்ட் 27 - செப். 11) பிரதான சுற்றில் பங்கேற்பதை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே உறுதி செய்துள்ளன.

6வது அணியை தீர்மானிப்பதற்கான தகுதிச் சுற்று போட்டியில் யுஏஇ, குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இலங்கையில் ஆகஸ்ட் 27ம் தேதி ஆசிய கோப்பை டி20 தொடர் தொடங்க இருந்த நிலையில், அங்கு தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் நிலவுவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. தகுதிச் சுற்று போட்டிகளும் யுஏஇ மைதானங்களிலேயே நடைபெற்றாலும், இந்த தொடரை நடத்தும் நாடு என்ற அந்தஸ்து இலங்கைக்கே வழங்கப்படுகிறது.

Related Stories: