×

பிரபாத் சுழலில் மூழ்கியது பாகிஸ்தான்: டெஸ்ட் தொடரை சமன் செய்தது இலங்கை

காலே: பாகிஸ்தான் அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 246 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை 378 ரன் குவிக்க, பாகிஸ்தான் 231 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, 147 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தனஞ்ஜெயா டி சில்வா 109 ரன், கேப்டன் கருணரத்னே 61 ரன், ரமேஷ் மெண்டிஸ் 45* ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 508 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 4ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்திருந்தது. இமாம் உல் ஹக் 46 ரன், கேப்டன் பாபர் ஆஸம் 26 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இமாம் 49 ரன், ரிஸ்வான் 37, பாபர் 81 ரன், யாசிர் ஷா 27 ரன், நசீம் ஷா 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

பிரபாத் ஜெயசூரியா சுழலை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (77 ஓவர்). ஜெயசூரியா 5, ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட் கைப்பற்றினர். 246 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தனஞ்ஜெயா டி சில்வா ஆட்ட நாயகனாகவும், பிரபாத் ஜெயசூரியா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். பிரபாத் தனது முதல் 6 டெஸ்ட் இன்னிங்சில் 29 விக்கெட் வீழ்த்தி (6-118, 6-59, 5-82, 4-135, 3-80, 5-117) புதிய சுழல் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

Tags : Pakistan ,Sri Lanka , Prabhat Spin, Pakistan, Test series, Sri Lanka
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..