ஒருநாள் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி: ஒயிட்வாஷ் ஆனது வெஸ்ட் இண்டீஸ்

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான   3வது ஒருநாள் போட்டியில், 119 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதிப்படி) அபாரமாக வென்ற இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து அசத்தியது. போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்தியா  24 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்று தொடங்கிய ஆட்டம் 36வது ஓவர் முடிவில் மீண்டும் மழை காரணமாக நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்திருந்தது. கேப்டன் தவான் 58, ஷ்ரேயாஸ் அய்யர் 44, சூரியகுமார் 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

ஷுப்மன் கில்  98 ரன் (98 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), சஞ்சு சாம்சன் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெ.இண்டீஸ் தரப்பில் ஹேடன் வால்ஷ் 2, அகீல் உசேன் 1 விக்கெட் எடுத்தனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது, டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 263 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சிராஜ் வேகத்தில் கைல் மேயர்ஸ், ஷமார் புரூக்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, வெஸ்ட் இண்டீசுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. முன்னணி வீரர்கள் ஷாய் ஹோப் 22 ரன், பிராண்டன் கிங், கேப்டன் நிகோலஸ் பூரன் தலா 42 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 26 ஓவரில் 137 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது (4 பேர் டக் அவுட்). இந்திய பந்துவீச்சில் சாஹல் 4, சிராஜ், ஷர்துல் தலா 2, அக்சர், பிரசித் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்தியா 119 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஷுப்மன் கில் தட்டிச் சென்றார். இது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா பெறும் 12வது தொடர் வெற்றியாகும். மேலும், அந்த அணிக்கு எதிராக   இந்தியா தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி டிரினிடாட், லாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி ரோகித் ஷர்மா தலைமையில் களமிறங்குகிறது.

Related Stories: