44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா: சதுரங்க பார்டர் போட்ட வேட்டி, சட்டையுடன் பிரதமர்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை  சென்னை வந்தார். அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும்  அங்கவஸ்திரம் அணிந்து வந்திருந்தார். குறிப்பாக சதுரங்க கட்டம் கரை கொண்ட வேஷ்டியை அணிந்திருந்தார். அது போல் அவர் அணிந்திருந்த அங்கவஸ்திரத்திலும்  சிறிய, சிறிய சதுரங்க கட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இவை பார்ப்பதற்கு  மிகவும் அழகாக இருந்தது. சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை கடந்த 2019ம் ஆண்டு மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர்  மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் வந்திருந்தார். மேலும் சீன அதிபருடனான விருந்து நிகழ்ச்சியில் கூட தமிழகத்தின் பாரம்பரிய உணவு வகைகளே பரிமாறப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

* கமல் வர்ணனையில் தமிழர் வரலாறு அரங்கம் அதிர்ந்த கலை நிகழ்ச்சி

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கமல் குரலில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரியத்தை கலாச்சாரத்தை எடுத்துக் கூறும்  விதமாக கமல்ஹாசன் பேசினார். முதலாம் நூற்றாண்டில் கரிகாற்சோழன் கல்லணைக் கட்டியது முப்பரிமாணபடத்துடன் விளக்கப்பட்டது. ராஜேந்திர சோழன் கடல் கடந்து சென்று போரிட்டு வென்றது சிறப்பாக நடித்துக் காட்டப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக்கலைகள் சிலம்பாட்டம் பற்றி சிறப்பான விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடித்துக் காட்டப்பட்டது. பரதநாட்டியம், நாட்டுப்புற கலை நடனங்களை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் விரலில் தாளம் போட்டு கண்டு  ரசித்தனர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள் என  சிறப்பிக்கப்பட்டது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஐவகை நிலங்களைப் பற்றி  சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டது. சிலப்பதிகாரத்தில் சிலம்பை உடைத்து மதுரையை எரித்த கண்ணகி கதை நடித்துக்காட்டப்பட்டது. தமிழக வரலாற்றில் மீள முடியாத சோகம் ஆழிப்பேரலை என நடித்துக்காட்டப்பட்டது. மீள முடியாத சுனாமியில் இருந்து மீண்டவர்கள் தமிழர்கள். யாதும் ஊரே யாவரும் கேளீர் இதுவே தமிழகத்தின் பண்பாடு என்று பாரம்பரியம் பற்றி நடித்துக் காட்டப்பட்டது.

* அணிவகுப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில், சர்வதேச நாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தேசிய கொடிகளை ஏந்தி அந்தந்த நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கணைகள் அணிவகுத்தனர். பேக்கிரவுண்டில் ஒருவன் ஒருவன் முதலாளி படத்தின் பாடல் இசை இசைக்கப்பட்டது. 186 நாடுகளின் கொடி அணிவகுப்பை முன்நின்று வழிநடத்தியது, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* மையப் பகுதியில் டிஜிட்டல் திரை

தொடக்க விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டரங்கம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. விழா முழுவதும் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டது. போட்டி நடக்கும் அரங்கின் மையப்பகுதி டிஜிட்டல் திரையாக(ஸ்கீரின்) மாற்றப்பட்டிருந்தது. அதில் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் திரையிடப்பட்டது. வழக்கமாக தியேட்டர்களின் முன் இருக்கும் ஸ்கிரினில் தான் படம் பார்ப்போம். ஆனால் இங்கு மேல் பகுதியில் இருந்து அரங்கின் தரைதளத்தில் வரலாற்று ஆவண படங்கள் ஒளிப்பரப்பட்டது. இந்த நவீன தொழில் நுட்பம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories: