கல்லூரி கனவு புத்தகத்தில் இயற்கை மருத்துவத்தை சேர்க்க கோரிய வழக்கு: அரசின் கொள்கை முடிவு என தலைமை நீதிபதி அமர்வு கருத்து

மதுரை: கல்லூரி கனவு புத்தகத்தில் இயற்கை மருத்துவத்தை சேர்க்கக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டியதில்லை என தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சணல்கரையைச் சேர்ந்த சுரேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிளஸ் 2 முடித்தவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கல்லூரி கனவு  புத்தகத்தில் மருத்துவம், அது சார்ந்த சுகாதார அறிவியல் என்ற பிரிவில், எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎச்எம்எஸ், பிஏஎம்எஸ், பியூஎம்எஸ், பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட படிப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் நலன் கருதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்புகள் குறித்தும் கல்லூரி கனவு புத்தகத்தில் சேர்த்திட உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்து, இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு. இதில் தலையிட வேண்டியதில்லை. எனவே, மனுதாரர் தனது கோரிக்கை குறித்து உரிய அமைப்பிடம் முறையிட்டு நிவாரணம் பெறலாம் எனக் கூறி மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: