பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழுவா? ஒன்றிய அரசு மறுப்பு

புதுடெல்லி: ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி மாநிலங்களவையில் எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. ஆனால், பொது சிவில் சட்டம் குறித்த பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அளிக்கும்படி சட்ட ஆணையத்தை ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது,’ என தெரிவித்தார். ஏற்கனவே, கடந்த 22ம் தேதி மக்களவையில் ஒரு கேள்விக்கு கிரண் ரிஜிஜூ பதிலளிக்கும்போது, ‘நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை,’ என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: