×

ஜனாதிபதி முர்மு மனம் புண்பட்டு இருந்தால் என்னை தூக்கில் போடட்டும்: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆவேசம்; நாடாளுமன்றத்தில் பாஜ அமளி

புதுடெல்லி: ஜனாதிபதி முர்முவை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சித்ததை கண்டித்து நாடாளுமன்றத்தில் பாஜ அமளியில் ஈடுபட்டது. ‘நான் கூறியது மனதை புண்படுத்தி இருந்தால், ஜனாதிபதி என்னை தூக்கில் போடட்டும்,’ என்று ரஞ்சன் ஆவேசமாக கூறியுள்ளார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதை கண்டித்து, நேற்று முன்தினம் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள், ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். அப்போது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது பற்றி மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், ‘ராஷ்டிரபதி (ஜனாதிபதி) என்பதற்கு பதிலாக ராஷ்டிரபத்தினி’ என கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜ நேற்று அமளியில் ஈடுபட்டது.

மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் ‘சவுத்ரியும், அவரது பேச்சுக்கு சோனியா காந்தியும் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். பாஜ.வின் அமளியால், மாநிலங்களவையில் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘சவுத்ரியின் இந்த பேச்சை சோனியா காந்தி அங்கீகரித்துள்ளார்,’ என்று குற்றம்சாட்டினார். மேலும், அவைக்கு வந்த சோனியாவையும் கண்டித்து பாஜ எம்பி.க்கள் கோஷமிட்டனர். இது பற்றி சவுத்ரி கூறுகையில், ‘ராஷ்டிரபதி பவன் என்பதற்கு பதிலாக ராஷ்டிரியபத்தினி என வாய் தவறி கூறி விட்டேன். நான் பேசியது ஜனாதிபதி முர்முவை புண்படுத்தி இருந்தால், அவரிடம் நேரில் மன்னிப்பு கேட்பேன். இதை குற்றமாக அவர் கருதினால், எனக்கு தூக்கு தண்டனை அளிக்கட்டும். இதில், எந்த வகையிலும் சம்பந்தப்படாத சோனியா காந்தியை வம்புக்கு இழுப்பது ஏன் என்பது புரியவில்லை,’ என்று தெரிவித்தார்.

மேலும் 3 பேர் சஸ்பெண்ட்: மாநிலங்களவைக்யில், நேற்று அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி.க்கள் சுசில் குமார் குப்தா, சந்தீப் குமார் குப்தா, சுயேச்சை எம்பி  அஜித் குமார் பக்யான் ஆகியோர் இந்த வாரம் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே ஜனாதிபதியை விமர்சித்தது தொடர்பாக நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கும்படி ஆதிர் ரஞ்சனுக்கு தேசிய பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

* என்னுடன் பேசாதீர்கள்
அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு வெளியே சென்றபோது, பாஜ எம்பி ரமாதேவியை பார்த்து, ‘சவுத்ரி மன்னிப்பு கேட்டு விட்டாரே... நான் என்ன தவறு செய்தேன்..’ என சோனியா கேட்டார். அப்போது., தனது இருக்கையில் இருந்தபடி, ‘மேடம், சோனியா நான் உதவட்டுமா?’ என்று கிண்டலாக ஸ்மிருதி கேட்டார். அவரை பார்த்து, ‘என்னுடன் பேசாதீர்கள்,’ என்று சோனியா கடிந்தார்.

Tags : President ,Murmu ,Adhir Ranjan Chowdhury ,BJP ,Amali ,Parliament , If President Murmu is offended, let him hang me: Adhir Ranjan Chowdhury Obsession; BJP Amali in Parliament
× RELATED நாகை மீன்வள பல்கலை.க்கு ஜெயலலிதா பெயர்...