×

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார் மோடி: குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடு தமிழக அரசுக்கு பாராட்டு

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடு செய்ததாக தமிழக அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இதில், விளையாட்டு வீரர்கள், உலக செஸ் பெடரேஷன் மற்றும் இந்திய செஸ் அமைப்பு நிர்வாகத்தினர், முக்கிய விருந்தினர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 44வது உலக சர்வதேச சதுரங்க போட்டியை நடத்தும் வாய்ப்பு முதல் முறையாக இந்தியாவுக்கு கிடைத்தது. அதனை நடத்தும் பொறுப்பை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்தார். இந்த போட்டியை நடத்த சென்னை அடுத்த மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது.

போட்டிக்காக உடனடியாக ரூ.100 கோடி நிதியையையும் ஒதுக்கினார். 186 நாடுகள், 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டியை, உலக நாடுகளே வியக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டார். அவ்வப்போது போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களும் அங்கு முகாமிட்டு செஸ் போட்டியில் எந்த சுணக்கமும் ஏற்படாத வகையில் பணிகளை வேகப்படுத்தினர். மேலும், செஸ் போட்டியை பிரபலப்படுத்த, தமிழகம் முழுவதும் மக்களை கவரும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக தமிழகம் முழுவதும் செஸ் போட்டியின் சின்னங்கள் சாலையின் மைய பகுதியில் இருந்து அரசின் உயர்ந்த கட்டிடங்கள் வரை காண முடிந்தது. மேலும், மாணவர்கள், பொதுமக்களிடையே செஸ் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல்முறையாக போட்டிக்கென தனிச் சின்னம் ‘தம்பி’ அறிமுகப்பட்டது. குதிரை தலையுடன் கூடிய அந்த தம்பி சின்னம் படங்களாகவும், சிலைகளாகவும் முக்கிய இடங்களில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலைகளில் வைக்கப்பட்டன. இது மக்களை வெகுவாக கவர்ந்தது. உலக அரங்கமே அதிரும் வகையில் பன்னாட்டு போட்டிக்கான அனைத்தும் ஏற்பாடுகளையும் தமிழக அரசு நான்கே மாதத்தில் சிறப்பாக செய்து முடித்திருந்தது.

இந்த நிலையில் 44வது சர்வதேச சதுரங்க செஸ் போட்டிக்கான பிரமாண்ட தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டியின் தொடக்கவிழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தயாநிதி மாறன் எம்பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.

வரவேற்பை முடித்து கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு புறப்பட்டு சென்றார். பிரதமரின் பாதுகாப்புக்காக, பிரதமர் மோடியின் ஹெலிகாப்டருக்கு முன்னும், பின்னுமாக மேலும் 2 ஹெலிகாப்டர்கள் சென்றன. தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரும் ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு வந்தனர். அங்கு அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாகூர், எல்.முருகன், அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சரியாக மாலை 6.25 மணிக்கு வந்தார். விழா மேடைக்கு வந்த அவர் அனைவரையும் பார்த்து கையசைத்தார்.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு தொல்காப்பியம் என்ற நூலை வழங்கி வரவேற்றார். அதன் பிறகு சரியாக 6.27 மணிக்கு தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. இந்த பாடல் 100 இசைக்கலைஞர்களால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வரவேற்று பேசினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு மாமல்லபுரம் கடற்கரை கோயில் சிற்பத்தை நினைவு பரிசாக வழங்கி கவுரவித்தார். அப்போது பிரதமர் மோடி கைக்குலுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர், இருக்கையில் அமர்ந்த மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் மோடி காதில் ஏதோ சொல்லி சிரித்தார். இதனை கேட்ட மு.க.ஸ்டாலினும் சிரித்துக் கொண்டே மோடியின் கையைப் பிடித்துபேசி சிரித்தார். விழா மேடையில் நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து விழா தொடங்கியது. விழாவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதற்காக குலுக்கல் முறையில் நடந்த நிகழ்வில் கருப்பு காய்களை மோடி தேர்ந்தெடுத்தார். இந்த காய்கள் மூலம் நாளை நமது அணி விளையாடுகிறது.

போட்டியை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி பேசியதாவது: மிகவும் பிரபலமான இந்த 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது  பெருமையளிக்கிறது. காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடி வரும் இந்த ஆண்டில், இந்த செஸ் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இந்திய வரலாற்றில் இடம்பெறக்கூடிய நிகழ்வாகும். இந்த போட்டியை நடத்தும் தமிழக அரசுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூவர் கூறியுள்ளார். ‘‘இருந்தோம்பி  இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு’’ அதாவது  இருப்பதை வைத்து இல்வாழ்க்கை வாழ்ந்து விருந்து கொடுப்பது போன்றவை விவசாயிகளின் பொருட்டே என்பது இதன் பொருளாகும். அதைப்போன்றுதான் இங்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த செஸ் போட்டி முதன் முதலில் நடைபெறுகிறது. மிகச்சிறந்த கலாசாரம் மற்றும் வீரர்கள் நிறைந்த இடம். இங்கு நீங்கள் பங்கேற்க வந்திருப்பது என்றும் நினைவில் இருக்கும். இந்த போட்டியில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கன்றனர். அதிக போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான பெண் போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் தீபம் 27 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது. சர்வதேச செஸ் போட்டி அதன் தாயகமான இந்தியாவில் நடைபெறுகிறது. தமிழ்நாடு செஸ் போட்டியின் பிறப்பிடம். இங்குள்ள பல கோயில்களின் அழகான கட்டிடக்கலைகள் அதன் கலாசாரத்தை பிரதிபலிக்கின்றன. உலகத்தின் மிக பழமையானது தமிழ்மொழியாகும். சதுரங்கநாதர் கோயிலில் கடவுளே அரசியுடன் சதுரங்கம் ஆடியுள்ளார்.

தமிழகத்திலிருந்து ஏராளமான செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் வந்துள்ளனர். உங்களுக்கு சென்னை, மகாபலிபுரம் உள்ளிட்ட மிகவும் அழகான பகுதிகளை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விளையாட்டுக்கு மட்டும்தான் வானளாவிய சக்தி உள்ளது. அதனால்தான் எல்லோரையும் ஒன்று சேர்க்கவோ, ஒருங்கிணைக்கவோ முடியும். கொரோனா காலத்தில் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டிருந்த நாம் மீண்டு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளோம். கொரோனாவிற்கு பிறகு பல போட்டிகளில் நாம் பங்கேற்றுள்ளோம். இளைஞர்களும், மிகச்சிறிய கிராமத்திலிருந்து வருபவர்களும் இதுபோன்ற விளையாட்டுகளில் அதிகம் பங்கேற்று பெருமையை கொண்டு வந்துள்ளனர்.

இந்திய விளையாட்டு போட்டிகளில் பெண்கள் முன்னிலை வகித்து வருகிறார்கள். இந்தியா தற்போது ஒலிம்பிக், பாராலிம்பிக்கில் சிறந்த பங்களிப்பையும், வெற்றிகளையும் பெற்றுள்ளது. இந்தியாவில் விளையாட்டுக்கான அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன. இங்கிலாந்தில் 22வது காமன்வெல்த் போட்டி நடைபெறும் இந்த நாளில் இங்கு நாம் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கியுள்ளோம். இந்த விளையாட்டு போட்டியில் தோல்வி என்பதே இல்லை. அவர்களும் அடுத்த முறை வெற்றியாளர்கள்தான். உங்கள்  அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா உங்களை எப்போதும் மன மகிழ்வுடன் வரவேற்கும். இந்த போட்டியை தொடங்கி வைக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் நடனங்கள், நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதாவது தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாட்டின் சிறப்பை விளக்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் மண்- முப்பரிமான வடிவில் நிகழ்ச்சி, தமிழ் மொழி, தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. கடல் கடந்து தமிழ் மன்னர்கள் பெற்ற வெற்றியை விளக்கும் கலை நிகழ்ச்சி, சேர-சோழ-பாண்டியர்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் கலைநிகழ்ச்சி, தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை எடுத்துரைக்கும் காட்சிகள் இடம் பெற்றன. தமிழ்நாட்டின் நீண்ட, நெடிய வரலாறு, அழகிய வடிவில் எடுத்துரைக்கப்பட்டன. இதனை பிரதமர் மோடி ஆர்வமுடன் கண்டுகளித்தார்.

மேலும் என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனம் நிகழ்ச்சி நடந்தது. டெல்லியில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ஜோதி 75 மாநகரங்களை சுற்றி நேற்று சென்னை வந்தது. அந்த செஸ் ஜோதியை செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்தி விழா மேடைக்கு வந்தார். அதனை அவர் முதல்வர் மு.க.ஸ்டாலிடன் ஒப்படைத்தார். பின்னர் ஜோதியை அவர் பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த ஜோதி இந்திய வீரர்கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு ஏற்றப்பட்டது. விழாவில் ஒன்றிய தகவல் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், ஒன்றிய தகவல்-ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடக்க விழாவில் அமைச்சர்கள், போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், வெளிநாடு முக்கிய பிரமுகர்கள்,  பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக போட்டியில் பங்கேற்கும் இந்தியா உள்பட 186 நாடுகளின் வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டு கொடியுடன் அணிவகுப்பு வந்தனர். விழா முடிந்ததும் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்றார். இரவு கவர்னர் மாளிகையில் பிரதமர் மோடி ஓய்வு எடுத்தார். இன்று காலை பிரதமர் மோடி சென்னை அண்ணா பல்கலைக்கழக 44வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். நிகழ்ச்சியை முடித்து கொண்டு காலை 11.50 மணியளவில் மோடி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். சென்னை நேரு ஸ்டேடிடத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியால் சென்னை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சென்னையில் விழா நடைபெற்ற இடம் இரவையே பகலாக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலித்தது.

Tags : Modi ,Chess Olympiad ,Chennai Nehru Indoor Sports Hall ,Tamil Nadu Government , Modi inaugurated Chess Olympiad with spectacular performances at Chennai Nehru Indoor Sports Hall: Kudos to Tamil Nadu Government for excellent organization in a short period of time
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...