×

சின்னசேலம் மாணவி இறப்பு குறித்த விசாரணையில் காவல்துறை தீவிரம் காட்ட வேண்டும்; கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது நம்ப தகுந்ததாக இல்லை. பெற்றோருக்கு தெரியாமல் சடலத்தை பள்ளி நிர்வாகிகள் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். மரணத்திற்கு முன்பே காயங்கள் ஏற்பட்டுள்ளது. 14ம் தேதியே மாணவியின் உடற்கூறு ஆய்வு கிடைக்கப்பெற்ற நிலையில் பள்ளி நிர்வாகத்தினரை கைது செய்யாமல் விட்டுவிட்டனர்.

மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால் 17ம்தேதி அந்த பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. பள்ளியில் ஏற்பட்ட வன்முறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. திட்டமிட்டு இது நடத்தப்பட்டு இருக்கலாம். வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் ஆர்வம் காட்டும் காவல்துறையினர் மாணவியின் இறப்பு குறித்து விசாரணையில் தீவிரம் காட்டவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. இந்த வழக்கில் ஏதே ஒரு சக்தி வலுவாக செயல்படுகிறது. பெற்றோரின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்காதது வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஆர்எஸ்எஸ், பிஜேபி நிர்வாகி ஆவார். இதனால்தான் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதா என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது.

அண்ணாமலையை கேட்க விரும்புகிறேன் ஏன் மதிக்காக போராடவில்லை? ஏன் இதுவரை வந்து பார்க்கவில்லை. மாணவியின் மரணம் குறித்து உண்மையான விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். ஆகஸ்ட் 5ம்தேதி மாணவி மதியின் மரணத்திற்கு நீதிகேட்டு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chinnasalem ,K. Balakrishnan , Police must be serious in investigating Chinnasalem girl's death; Emphasis on K. Balakrishnan
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...