×

ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தமிழக அரசின் சொந்த நிதியில் மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்; அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை என்பதால், மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய அண்மையில் பிரிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படவில்லை.

ஒன்றிய அரசு நிதியுதவியுடன் மூன்றாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்பதற்காக மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் லட்சியத்திலிருந்து தமிழகம் பின்வாங்க கூடாது. மாவட்டத்திற்கு ஓர் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு மாற்று வழிகள் என்னென்ன உள்ளன என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும். ஒன்றிய அரசு மூன்று கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக அறிவித்த 157 மருத்துவக் கல்லூரிகளில் இதுவரை 102 கல்லூரிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 55 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்ட போதிலும் நிலம் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவை இன்னும் அமைக்கப்படவில்லை. அவற்றில் பல கல்லூரிகள் 8 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டவை ஆகும்.

8 ஆண்டுகளாக அக்கல்லூரிகள் அமைக்கப்படாத நிலையில், அவற்றை தமிழ்நாட்டுக்கு மாற்ற முடியுமா? என்பது குறித்து ஒன்றிய அரசுடன் தமிழக அரசு பேச வேண்டும். மற்றொருபுறம், சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டிற்கு 17 கல்லூரிகள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது 6 மாவட்டங்களில் மட்டும் தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். இது சாத்தியமாகக் கூடிய இலக்கு தான் என்பதால் நடப்பாண்டிலும், அடுத்த ஆண்டிலும் தலா மூன்று மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசே அதன் சொந்த நிதியில் அமைக்க முன்வர வேண்டும். அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கும் வகையில், அவற்றுக்கான  அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union Government ,Tamil Nadu Government ,Anbumani , Union Government, Government of Tamil Nadu, Medical College, Anbumani
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...